கடற்காற்று நல்லதா? கெட்டதா? வெதர்மேன்கள் சொல்வதைப் பாருங்கள்!

கடற்காற்று நல்லதா? கெட்டதா? வெதர்மேன்கள் சொல்வதைப் பாருங்கள்!

சென்னையில் நேற்று வியாழனன்று அதிகாலையில் கடல் காற்று வீசியது, அந்தக் கடற்காற்றானது நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறைத்தது, ஆனாலும் மக்கள் வியர்வையில் குளிப்பதும், கொடும் வெப்பத்தில் நடமாட இயலாமல் திண்டாடித் தவிப்பதும் நின்றபாடில்லை. கடற்காற்று குளிர்ச்சியான இதத்தை தருவதற்கு பதிலாக புழுக்கத்தையே பரிசாகத் தந்தது.

ஏனென்றால், 70% க்கும் அதிகமான ஈரப்பதம் வியர்வையை விரைவாக ஆவியாக விடவில்லை.

கடற்காற்றின் ஆரம்ப வருகை மே மாதத்தின் பிற்பகுதியில் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர், ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு காற்றின் திசைகள் மாறும்போது வெப்பநிலை மாத இறுதியில் உயரத் தொடங்கும் என்று காலநிலைப் பதிவர்கள் தெரிவித்தனர்.

வியாழன் அன்று காலை 10.40 மணியளவில் மீண்டும் கடல் காற்று வீசியது. இது புதன் கிழமையை விட ஒரு மணி நேரம் முன்னதாக, கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வெப்பநிலையை விரைவாகக் குறைத்தது. பிற்பகலில், வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக இருந்தது.

ஆனால், வானகரம், தாம்பரம் போன்ற கடலில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும், 40.1 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்ததால், சிறிது சிறிதாக மதியத்திற்கு மேல் தான் கடல்காற்று சென்னையின் உட்பகுதியை எட்டியது.

இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) இயக்குநர் செந்தாமரை கண்ணன் இது குறித்துப் பேசும் போது; “கடல் காற்று காரணமாக ஈரப்பதம் அதிகரித்து மக்களிடையே புழுக்கமான அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஈரப்பதம் குறைவாக இருந்தால், வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பதோடு வெப்பநிலை 41 டிகிரி C-42 டிகிரி செல்சியஸ் தாண்டும்போது காற்று வறண்டு இருக்கும். இது தோலில் எரிச்சலையும், முள் குத்துவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்," என்று கூறினார்.

அத்துடன், அடுத்த 48 மணிநேரத்திற்கு, நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி C-39 டிகிரி C ஆகவும், குறைந்தபட்சமாக 28 டிகிரி C-29 டிகிரி C ஆகவும் இருக்கும். எனவும் அவர் தெரிவித்தார்.

பதிவர் பிரதீப் ஜான் கூறுகையில், கடல் காற்று நகரின் மையப் பகுதிகளை அதிக வெப்பநிலையிலிருந்து இந்த மாத இறுதி வரை காப்பாற்றலாம், அதன் பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு வெப்பநிலை மீண்டும் ஒருமுறை உயரலாம். அப்போது அந்த 5 நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் காணப்படலாம். என்று கூறினார்.

ஆக, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மற்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் கணக்கீட்டின் படி பார்த்தால் இந்த கடற்காற்றின் மூலமாக நமக்கு நன்மையும், தீமையும் ஒருசேரக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று தான் கருத வேண்டியதாயிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com