தலைமை ஆசிரியரைத் தாக்கி ஆபாசமாகத் திட்டி பள்ளியைப் பூட்டிச் சென்ற தாளாளர்! ஏன்?

தலைமை ஆசிரியரைத் தாக்கி ஆபாசமாகத் திட்டி பள்ளியைப் பூட்டிச் சென்ற தாளாளர்! ஏன்?

தேனி திட்டச்சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மஹாராஜா தொடக்கப் பள்ளியில். சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளியில் சென்றாயப் பெருமாள் என்ற தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியையும் பணிபுரிந்து வருகின்றனர். அரசு உதவி பெறும் அப்பள்ளியின் தாளாளராக உள்ள அன்பழகன் தேனி, அல்லிநகரம் பகுதியில் இயங்கி வரும் முத்தையா எனும் அரசுப் பள்ளியிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இது தொடர்பாகக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு முறை புகார் தெரிவித்தும் கூட அன்பழகனிடம் பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னைக் குறித்து இப்படி தொடர்ந்து புகார் எழுப்பி வருவது தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரான சென்றாயப்பெருமாளும், ஆசிரியையும் தான் எனக்கருதிய அன்பழகன் அவர்களைப் பலமாதங்களாகத் தொடர்ந்து துன்புறுத்தி வந்திருக்கிறார். அத்துடன் பலமாதங்களாகவே அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை என்பதாகத் தகவல். இது தொடர்பாக நேரடியாக துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு இப்போது அவர்கள் இருவரும் அரசு மூலம் நேரடியாக சம்பளம் பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த அன்பழகன் தலைமை ஆசிரியரிடம் தகராறு செய்ததோடு மாணவமாணவிகள் முன்னிலையில் ஆபாசமாகப் பேசி அவரைத் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, பள்ளியின் அனைத்து வகுப்பறைகள் மற்றும் மெயின் கேட்டையும் பூட்டி விட்டுச் சென்று விட்டார். இதனால் பள்ளிக்கூட அறைகளில் மாட்டிக் கொண்ட மாணவர்கள் அலறத் தொடங்கினர். அவர்களது அலறல் கேட்டு அங்கு விரைந்தவர்களிடம், அன்பு சார் தான், தலைமை ஆசிரியரைத் தாக்கி விட்டு பள்ளியைப் பூட்டிச் சென்றதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தேனியில் அரசு உதவி பெறும் பள்ளியில் நிகழ்ந்த இந்த அராஜக சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றொரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் அன்பழகன் எப்படி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு தாளாளராக இயங்க முடியும்?

அரசின் கல்வித்துறை தொடர்பான சட்டங்களில் இவருக்கு மட்டும் ஸ்பெஷலாக ஏதாவது விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா? அப்படி எதுவும் இருக்க கிஞ்சித்தும் வாய்ப்பில்லை. ஆனால், அன்பழகன் அப்படி நினைத்துக் கொண்டு தான் இப்படி ஒரு அடாவடியில் இறங்கி இருக்கிறார். ஒரு பொறுப்பு மிக்க தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து கொண்டு பதின்ம வயதில் இருக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் அவர்களது மரியாதைக்குரிய தலைமை ஆசிரியரை ஆபாசமாகப் பேசி அடிக்க இவருக்கு எப்படி துணிச்சல் வந்தது? இந்த எதேச்சாதிகாரம் எப்படி சாத்தியமானது? அது குறித்து விசாரிக்க கல்வித்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அன்பழகனைத் தேடிய போது அவர் அங்கில்லை. விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து ஆள் எஸ்கேப் ஆகி விட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com