
150 ஆண்டுகள் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டம் பற்றி பேச்சுகள் மறுபடியும் ஆரம்பித்திருக்கின்றன. திட்டத்தை போராடியும் வாதாடியும் நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒருவேளை திட்டம் நிறைவேற்றப்பட்டால், தூத்துக்குடி, விசாகப்பட்டினம் என கிழக்கு கடற்கரையோர துறைமுகங்களுக்கு ஏறுமுகம்தான். அரபிக்கடலோரம் வரும் கப்பல்கள் சென்னைக்கு வரவேண்டுமென்றால் இலங்கை வழியாக வரவேண்டியிருக்கிறது. இனி இலங்கை வழியாக வரவேண்டிய அவசியமில்லை. பயண நேரமும் ஏறக்குறைய 30 மணி நேரம் குறையும். எரிபொருளும் மிச்சமாகும்.
தூத்துக்குடி - கொழும்பு இடையே நிறுத்தப்பட்ட பயணிகள் கப்பலை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இரு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் சேது கால்வாய் திட்டம் நிறைவேறினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல்வழி போக்குவரத்து பிரபலமாகிவிடும்,
பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் சேது கால்வாய் திட்டம் நேரு பிரதமராகும்போது வளர்ச்சித் திட்டமாக அறிவிக்கப்பட்டது. சேது சமுத்திர கல்வாய் திட்டதை நிறைவேற்றினால் தமிழ்நாட்டின் வர்த்தகம் பெருகும். மீனவர்களின் வாழ்வு செழிக்கும். திட்டத்தை நிறைவேற்ற எழுச்சி நாள் கொண்டாடப்படும் என்று திட்டத்தை வரவேற்றார், அண்ணாதுரை.
கிழக்குக் கடற்கரையோரத்தில் உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறுவதற்கு, குறிப்பாக தூத்துக்குடி துறைமுகம் அடுத்த கட்ட வளர்ச்சி பெறுவதற்கு சேது சமுத்திர திட்டம் அவசியம் என்றார், கருணாநிதி. வாஜ்பாய் காலத்தில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் நடந்தது.
2004ல் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன்சிங் ஆட்சி அமைந்தபோது, திட்டப்பணிகள் ஆரம்பமாகின. திட்டப்பணிகள் பாதியளவில் முடிந்தபோது, அரசியல் காரணமாக திட்டத்திற்கு முட்டுக்கட்டை விழுந்தது. அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கு திட்டம் பற்றிய எந்த செய்திகளும் இல்லை.
திட்டம் நிறைவேற்றப்பட்டால், அந்நிய செலாவணி அதிகரிக்கும். கப்பல்களின் பயண தூரம் குறையும். மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் ஜலசந்தி சென்று வர மீனவர்களுக்கு சேது கால்வாய் உதவியாக இருக்கும். நாட்டின் கடலோர பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை கிடைக்கும்.
சேது கால்வாய் திட்டத்தால் ராமர் பாலம் பாதிக்கப்படும் என்பதால் பா.ஜ.க முன்னர் எதிர்ப்பு தெரிவிப்பு வந்தது. திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவோம் என்று அறிவித்தார்கள். இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
திட்டத்தை நிறைவேற்றுவதில் ராமர் பாலம் மட்டுமல்ல இன்னும் சில தடைகளும் உண்டு. சேது கால்வாய், ஆழமில்லாத பகுதியில் அமையவிருக்கிறது. கப்பல்கள் உள்ளே வருவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம்தானா என்கிற கேள்வி எழுகிறது. கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள கடல் சார் உயிர்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள். இனி பேச வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல, தொழில்நுட்ப வல்லுநர்கள்தான்.