பள்ளி பாடத்தில் பாலியல் கல்வி இருபது சதவிகித நாடுகளில் மட்டுமே உள்ளது - யுனெஸ்கோ அறிக்கையில் தகவல்.


பள்ளி பாடத்தில் பாலியல் கல்வி இருபது சதவிகித நாடுகளில் மட்டுமே  உள்ளது - யுனெஸ்கோ அறிக்கையில் தகவல்.

பாலியல் குறித்த புரிதல்கள் மற்றும் விழிப்புணர்வு அறிவியல் முன்னேறிவிட்ட இந்தக் காலத்திலும் இன்னும் மனிதர்களிடையே பெருமளவில் இல்லை என்பதற்கு சான்றாக பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் ரீதியான பல சம்பவங்கள் மூலம் பல செய்திகளை நாம் அறிகிறோம்.

  
    உலகில் உள்ள  20  சதவீத நாடுகளில் மட்டுமே பள்ளி பாடதிட்டத்தில் பாலியல் கல்வி சட்டப்பூர்வமாக உள்ளது என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. பாலியல் என்பது இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் அடிப் படையான விஷயம். ஆனால், அந்தக் காலம் முதல் கல்வியறிவும் விஞ்ஞானமும் பெருகி விட்ட இந்தக் காலம் வரை  பாலியல் குறித்த சரியான புரிதல்கள் இல்லாததால் உலகில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனால் சிறு வயது முதலே ஆண், பெண் குழந்தைகளுக்கு பாலின வேறுபாடின்றி பாலியல் தொடர்பான அடிப்படை விஷயங்களைக் கற்றுத் தருவது அவசியம்.

        இதற்காக பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைக் கொண்டு வர வேண்டும் என மனநல மருத்துவர்கள், குழந்தை நல நிபுணர்கள் மற்றும்  சமூக நல ஆர்வலர்கள் எப்போதும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அவரவர் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பலரும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில் எந்தெந்த நாடுகளில் பள்ளி பாடதிட்டத்தில் பாலியல் தொடர்பான கல்வி இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு மையமான யுனெஸ்கோ ஒரு ஆய்வு நடத்தியது.

    தொடர்ந்து இது குறித்து யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உலகில் 20 சதவீத நாடுகளில் மட்டுமே பள்ளி பாடதிட்டத்தில் பாலியல் கல்வி சட்டப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. பத்தில் ஆறு நாடுகளில் மட்டுமே உள்ள பாடதிட்டத்தில்  பாலியல் பாகுபாடு, குடும்ப ரீதியான பாலியல் கொடுமை, பாலியல் வன்முறை உள்ளிட்ட தலைப்புகளில் பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்துள்ளது. மூன்றில் இரண்டு நாடுகளில் கருத்தடை தொடர்பான பாடங்களும் உள்ளன. விரிவான பாலியல் கல்வி என்பது பாலுணர்வு தொடர்பான அடிப்படை அறிவு, உணர்ச்சி உடல்ரீதியான அறிவு உள்ளிட்டவற்றைக் கற்றுத் தருவது. இதன்மூலம் ஆண், பெண் இருவரையும் சரியாக மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மேலும், அவர்களின் ஆரோக்கியம் நல்வாழ்வு, கண்ணியம் ஆகியவற்ற அறிந்துகொள்வதற்கான அதிகாரத்தையும் இரு பாலருக்கும் அளிக்கிறது” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

     அன்று கூட்டுக் குடும்பங்கள் இருந்ததால் இலைமறை காயாக இருந்த பாலியல் விளக்கங்கள் வீட்டுப் பெரியோர்கள் வாயிலாக நாமே நாகரீகமாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ விளக்கிச் சொல்ல ஆளில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளில் மாணவப் பருவத்தில் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி குழப்பமின்றி வாழ்வில் முன்னேற பாலியல் குறித்த கல்வி அவசியம் தேவை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com