சரவணன் - தமிழகன்
சரவணன் - தமிழகன்

செயல் மேயராம்! கும்பகோணத்து தி.மு.க கவுன்சிலர்களின் அதிரடி ஆட்டம்!

மாவட்டத் தலைநகராக வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற வாய்ப்பில்லை என்பதால் ஆறுதல் பரிசாகத்தான் கும்பகோணம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைநகராக இல்லாமல், திடீரென்று மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட நகரங்களில் கும்பகோணமும் ஒன்று.

எந்தவித கட்டமைப்பும் இல்லாமல் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதால் ஆரம்பத்தில் தடுமாறியது. ஆனாலும், கோயில் நகரம், சுற்றுலாத் தலம், டெல்டாவின் வணிகத் தளம் என்கிற அடையாளங்களாலும், கும்பகோண வாசிகளின் ஒத்துழைப்பாலும் செயல்பட ஆரம்பித்தது.

இந்நிலையில் கும்பகோணம் மேயருக்கும் துணை மேயருக்கும் இடையே திடீரென்று வெடித்திருக்கும் பிரச்னையால் மக்கள் மத்தியில் கேலிக்குரியதாகிவிட்டது.

கும்பகோணம், தி.மு.கவின் கோட்டை என்பதில் சந்தேகமில்லை. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.கதான் வெற்றி பெற்றது. மாநகராட்சியின் முதல் மேயர், தி.மு.கவைச் சேர்ந்தவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக கூட்டணி தர்மத்தின் படி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

மூன்று வார்டுகளில் போட்டியிட்டு இரண்டில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கோ யாரை மேயராக்குவது என்பதில் குழப்பம். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற ஆட்டோ டிரைவரான சரவணனை மேயர் பதவியில் அமர வைத்தார்கள். மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தி.மு.கவைச் சேர்ந்த தமிழகன், துணை மேயரானார்.

ஆரம்பம் முதலே மாநகராட்சியில் மேயரை விட துணை மேயருக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது. தி.மு.க கவுன்சிலர்கள் தமிழழகனை `செயல் மேயர்' என்று அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதுதான் சர்ச்சையாகியிருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியில் தலைவர், செயல் தலைவர் பதவி இருக்க முடியும். ஆனால், மாநகராட்சி மன்ற பதவிகளில் மேயர், செயல் மேயர் எப்படி இருக்க முடியும்? செயல் மேயர் என்று துணை மேயரை அழைத்தால், மேயரை செயல்படாத மேயர் என்றுதானே அர்த்தம் என்கிறார்கள், உள்ளூர்வாசிகள்.

தி.மு.கவினரோ, செயல் மேயர் என்று அழைக்கக்கூடாது என்று எங்கேயாவது விதிகள் இருக்கிறதா என்று பதிலடி தருகிறார்களாம். செயல் மேயர் டைட்டில் சர்ச்சை, தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு நடுவே விரிசலை உண்டாக்கியிருக்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com