சமூக நீதி மறுக்கப்படுகிறது - பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், வேங்கைவயல் சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு ஆளுநர் பேச்சு!

சமூக நீதி மறுக்கப்படுகிறது - பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், வேங்கைவயல் சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு ஆளுநர் பேச்சு!

தமிழ்நாட்டில் ஜாதியக் கொடுமை தொடர்வது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி கவலை தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஆளுநர், வேங்கை வயல் சம்பவத்தை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வேங்கை வயல் கிராமத்தில் இருந்த நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்து தாமதாக கண்டுபிடிக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில், திட்டமிட்டு மலத்தை கலந்தது யார் என்பது குறித்த காவல்துறையினரின் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அரசியல் ரீதியாக சர்ச்சைகளை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து தமிழ்நாட்டின் முக்கியமான கட்சிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டாலும், காவல்துறையால் இதுவரை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று செய்திகள் வருகின்றன

இந்நிலையில் வேங்கை வயல் சம்பவம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜாதிக் கொடுமை தொடர்வதை ஆளுநர் தன்னுடைய பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார். பட்டியலினப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 7% பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.

குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் நடைபெறுகின்றன. கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களும் தொடர்கின்றன. இது வருத்தமளிக்கிறது. சமூகநீதி பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால், நடப்பது அதற்கு மாறாக உள்ளது என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்.

இதுவரை வரலாறு, பண்பாட்டு தளத்தில் மட்டுமே நின்று பேசி வந்த ஆளுநர், தற்போது சமூக பிரச்னைகளையும் தொட்டுக் காட்டியிருக்கிறார்கள். கடந்த மாதம் தமிழ்நாடு என்பதை ஏன் தமிழகம் என்று குறிப்பிடக்கூடாது என்று பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. வரலாறு, பண்பாட்டு ரீதியில் மட்டுமே தான் தமிழகம் என்பதை குறிப்பிட்டாக ஆளுநர் மாளிகை விளக்கமும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த நூறாண்டுகளாக சமூக நீதி பேசிவரும் தமிழ்நாட்டில், இன்றும் முறையான சமூக நீதி பின்பற்றப்படவில்லை என்று ஆளுநர் பேசியிருப்பது புதிய விவாதங்களை உருவாக்கலாம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலிக்குமா என்பதையும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com