உணவு நிறுத்தங்களில் டிரைவர், கண்டக்டர்களுக்கு கிடைத்த தனி கவனிப்புகளுக்கு ஆப்பு!

உணவு நிறுத்தங்களில் டிரைவர், கண்டக்டர்களுக்கு கிடைத்த தனி கவனிப்புகளுக்கு ஆப்பு!

அரசுப் பேருந்துகளில் தொலைதூரப் பயணங்களில் உணவுக்காக வாகனங்கள் நிறுத்தப்படும் போது அந்தப் பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்கள் தங்களுக்கென தனிப்பட்ட கவனிப்பைத் தரும் சலுகைகளைத் தரும் உணவகங்களில் வாகனத்தை நிறுத்தி உணவருந்தச் செல்வது வாடிக்கை. இதற்கு பயணிகளிடையே கடும் விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாது அந்தப் பழக்கம் அப்படியே தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

தங்களது உணவகங்களில் வாகனங்களை நிறுத்தி உணவருந்த வரும் டிரைவர், கண்டக்டர்களை உணவக உரிமையாளர்கள் தனியாகக் கவனித்தார்கள். அவர்களுக்கு என ஸ்பெஷலாக உணவுகள் வழங்கப்படுவதும் அவர்களைத் தனியாக அமர வைத்து உணவளிப்பதும் வழக்கமாக நடந்து வந்தது.

பயணிகளுக்கு அப்படி எந்த கவனிப்பும் இல்லை. புளித்துப் போன மாவில் சுட்ட தோசை. பாறாங்கல்லைப் போன்ற இட்லிகள், இலையில் விட்டதும் தண்ணீராய் சீறிப்பாயும் சாம்பார், கெட்டுப் போன சட்னி, எண்ணெய் குடித்து, அப்பளமாக உடையும் பூரிகளுமாகத்தான் பயணிகள் சாப்பிட்டாக வேண்டி இருந்தது. இதற்காக அவர்கள் பலமுறை கண்டனம் தெரிவித்தும் அதற்கு பலனில்லை.

இது மட்டுமல்ல, இப்படி நெடுந்தூரப் பயணங்களில் நடுவே நிறுத்தப்படும் உணவகங்களில் உணவு மற்றும் தண்ணீரின் விலையும் கூட அநியாயக் கொள்ளை விலையில் தான் இருந்தன. இத்தகைய எல்லா சிரமங்களையும் அனுபவிக்க வேண்டியது பயணிகள் மட்டுமே.

டிரவைர், கண்டக்டர்களுக்கு மேற்சொன்ன எவ்வித சங்கடங்களும் இல்லை. அவர்களுக்குத் தான் உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவக ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட கவனிப்பு இருக்கிறதே. ஆகவே இதற்கான செலவுகள் எதுவும் அவர்கள் தலையில் கட்டப்படுவதில்லை.

இந்த நிலை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் தற்போது திடீரென அரசு போக்குவரத்துக் கழகம், தொலை தூரப் பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்களை உணவகங்கள் தனியாக அமர்த்தி உணவருந்தச் செய்யக் கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் உள்ளதாவது,

‘அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் பொது அறையிலேயே அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு எனத் தனி அறை எதுவும் ஒதுக்கப்பட வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது’

- என உத்தரவிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com