அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் - செல்வ மகள் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சேமிப்புக் கணக்கு மேளா ஆரம்பம்!
இன்று முதல் 'சேவிங்ஸ் அக்கௌண்ட் மேளா' ஆரம்பமாகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கின்றன.
சென்ற வாரம் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கான சிறப்பு முகாம்களில் 72 ஆயிரம் கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இது எதிர்பார்ப்பை விட 30 சதவீதம் அதிகம் என்கிறார்கள்.
அடுத்து சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான திருவிழாவை தமிழக தபால்துறை தொடங்கியிருக்கிறது. முன்பெல்லாம் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்தால் நிர்வகிப்பது சிரமமான விஷயம். ரெக்கரிங் டெபாசிட், பிக்ஸட் டெபாசிட் போன்றவற்றை ஆரம்பிப்பதும், மாதாமாதம் குறித்த தேதிக்குள் பணம் கட்டுவதெல்லாம் சவாலான விஷயம்.
சமீபகாலங்களில் அஞ்சல்துறையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இனி வங்கிகளைப் போல் ஏ.டி.எம், இணை வழி சேவைகளையும் மொபைல் பேங்கிங் உள்ளிட்டவற்றையும் இனி பெற முடியும். குக்கிராமங்களில் கூட தபால் அலுவலகங்கள் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய முடியும்.
முதியோர்களுக்கான சேமிப்புத் திட்டங்களில் 8 சதவீதம் வட்டி கிடைக்கிறது. வங்கிகளோடு ஒப்பிடும்போது, வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் தபால் அலுவலகங்களை நோக்கி மக்களும் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.