தமிழகத்தில் பிரதமர் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்கள்!

தமிழகத்தில் பிரதமர் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்கள்!

இந்தியாவின் 13 ஆவது வந்தே பாரத் ரயிலை சென்னை-கோவை வழித்தடத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய ரயிலின் மூலம், தென்னிந்தியாவில் இப்போது இரண்டு அரை அதிவேக ரயில்கள் உள்ளன. அதற்கு முன்னதாக, செகந்திராபாத்-திருப்பதி வழித்தடத்தில் இந்தியாவின் 12 ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வந்தே பாரத் ரயில் சேவையில் சென்னை- கோவை வழித்தடத்தில் உள்ள ரயில், இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் குறைத்து, 5 மணி 50 நிமிடங்களில் பயண தூரத்தை கடக்கும். இதனால் பயண நேரமானது சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை மிச்சமாகும். அது தான் இந்த வந்தே பாரத் ரயிலின் பொதுவான சிறப்பம்சம்.

அதைத் தாண்டி வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் இதிலிருக்கின்றன என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்வது நல்லது.

இவ்வகையான வந்தே பாரத் ரயில்களுக்கான வெள்ளோட்டம் 2019 ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டு விட்டது. ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படியான அதிவிரைவு ரயில்களை சென்னை, பெரம்பூரில் இருக்கும் ஐ சி எஃப் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்பாக நாமே தயாரிக்க வேண்டும் என்பது தான் இதன் அடிப்படை நோக்கம். அந்த நோக்கம் தமிழகத்தைப் பொருத்தவரை நேற்று ஈடேறியது.

மற்ற ரயில்பெட்டிகளில் இல்லாத வேறு என்ன விதமான சிறப்புகள் இதில் இருக்கின்றன என்றால்,

v இந்த வந்தே பாரத் ரயில்பெட்டிகள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதிகளுடன் கூடியவையாக இயக்கப்படுகின்றன.

v இணைய வசதியுடன் கூடிய 32 இஞ்சு எல் ஈ டி தொலைக்காட்சிப் பெட்டி ரயிலின் உள்ளே பயணிகள் பார்க்கும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது. அதில் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் ரயில் எங்கிருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறது எனும் தகவலும் அதில் ஒளிபரப்பாகிறது.

v இதில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு, பொது வகுப்பு என இரண்டு விதமான ரயில்பெட்டிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் எக்ஸிகியூட்டிவ் கோச்சில் உள்ள இருக்கைகளை சுழலும் வசதியுடன் வடிவமைத்திருக்கிறார்கள். பொது வகுப்பிலும் இருக்கைகள் சாதாரணமாக இல்லாமல் சொகுசுப் பேருந்துகளில்

v இருப்பதைப் போல அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இருக்கையின் முன்பகுதியில் நாளிதழ்கள் வாசிக்கவும், சாப்பிடுவதற்குத் தோதாகவும் நீட்டி, மடக்கக்கூடிய வகையில் கையடக்க டேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன.

v அத்துடன் தற்போது புழக்கத்தில் இருக்கும் பிற ரயில்பெட்டிகளில் குடிதண்ணீருக்கென்று தனியாக வசதிகள் ஏதும் இருக்காது. ஆனால், வந்தே பாரத் ரயில்களில் மினரல் வாட்டர் கேன்கள் ஒவ்வொரு பெட்டியின் இறுதியிலும் கதவுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன.

v ரயிலின் வாயில்புறப்பகுதியில் டிஜிட்டல் ஸ்கிரீன் ஒளிரச் செய்யப்பட்டுள்ளது. திரையில் அது எந்த ரயில்? எங்கிருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறதூ?? கோச் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நொடிக்கொரு தரம் அறிவிப்பாகிக் கொண்டே இருக்கும். முந்தைய ரயில்களில் இந்த வசதி இருந்ததில்லை என்பது முக்கியமானது.

v அத்துடன் ரயிலின் பேண்ட்ரி பகுதியில் குளிர்சாதனப் பெட்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் உணவு அல்லது மருந்துகளை குளிர்ச்சியாக வைத்து எடுத்துச் செல்ல இந்த வசதி உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

v அத்துடன் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இந்தியன் டைப் மற்றும் வெஸ்டர்ன் டைப் என இருவகை டாய்லட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. டாய்லட்டின் உள்ளே துருப்பிடிக்காத ஸ்டீல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்.

v அத்துடன் மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு விஷயம், எமர்ஜென்ஸி டாக் பேக் யூனிட் வசதி ஒவ்வொரு பெட்டியிலும் பொருத்தப்பட்டுள்ளது. பயண நேரத்தில் உடல்நலக் கோளாறு அல்லது வேறு ஏதேனும் எமர்ஜென்ஸி தேவைகள் ஏற்பட்டு நாம் ரயில்பெட்டியை நிறுத்த வேண்டுமென்றாலோ அல்லது இயக்குபவர்களிடம் பேச வேண்டுமென்றாலோ இந்த வசதிகள் நமக்கு உதவும் என்கிறார்கள்.

v இதில் ‘புஷ் டு டாக்’ பட்டனை அழுத்தினால் ரயில்வே நிர்வாகத்தினர் நேரிடையாக நம்மிடம் பேச முடியும்.

v மேலும் ரயில் பெட்டி மொத்தமும் சி சி டி வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் இந்த வந்தே பாரத் ரயிலைப் பயன்படுத்தி பயணத்தை செளகர்யமாக்கிக் கொள்ளுமாறு மேற்கண்ட சிறப்பம்சங்கள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com