ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்

வைகுண்ட ஏகாதசி விழா; ஸ்ரீரங்க கோவில் முகூர்த்தக் கால்  வைபவம்!

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பர் 22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

இந்த விழாவையொட்டி அக்கோவிலின் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று  ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளியில் நடைபெற்றது.

 ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள், ஆலயத்தினரின் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட, முகூர்த்தக்கால் நடப்பட்டது. திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

 வைகுண்ட ஏகாதசியானது திருநெடுந்தாண்டத்துடன் தொடங்கி, பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 01-ம் தேதி மோகினி அலங்காரமும், ஜனவரி 02-ம் தேதி முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இறுதியாக, வைகுண்ட ஏகாதசி விழாவானது ஜனவரி 12-ம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவுபெறுகிறது.

மேலும் இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ப தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com