மேடை அநாகரீகம்: "ஆளுநர் பற்றி மட்டுமல்ல முதல்வரை பற்றியும் அவதூறாக பேசிவிட்டார்" - கட்சியிலிருந்து நீக்கி தி.மு.க தலைமை அதிரடி!

மேடை அநாகரீகம்: "ஆளுநர் பற்றி மட்டுமல்ல முதல்வரை பற்றியும் அவதூறாக பேசிவிட்டார்" - கட்சியிலிருந்து நீக்கி தி.மு.க தலைமை அதிரடி!

சென்ற வாரம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.கவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஆபாச பேச்சு இணையத்தில் வைரலாகியிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது கடும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. பா.ஜ.க உட்பட பல கட்சிகள் சம்பந்தப்பட்ட பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கண்டனம் தெரிவித்தார்கள்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் முழுமையான பேச்சும் இணையத்தில் கிடைக்கிறது. வீடியோவைப் பார்த்த பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பல தரப்பு மக்களிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த தகவலை தொடர்ந்து, தி.மு.க பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ்.பிரசன்னா ராமசாமி, சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.

ஆளுநரை அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியிருக்கிறார். கவர்னரை தரம் தாழ்ந்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இ.பி.கோ. 124 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதையெடுத்து, புகாரை விசாரித்த காவல்துறை மேலதிக நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறது. சம்பந்தப்பட்ட வீடியோவும் யூடியுப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வாட்ஸ் அப் வழியாக வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். எல்லை மீறி பேசும் தி.மு.க பேச்சாளர்களை கட்சியிலிருந்து கட்டம் கட்டுவது அல்லது தற்காலிகமாக நீக்குவது என்பது கலைஞர் காலம் தொடங்கி நடப்பதுதான்.

காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரே கட்சித் தலைமை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருப்பது தி.மு.க வட்டாரங்களை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட பேச்சாளர் ஆளுநரை மட்டுமல்ல முதல்வரையும் அவதூறாக பேசியிருப்பதாகவும், குறிப்பாக வாரிசு அரசியல்,

கருணாநிதி குடும்பத்தினர் பற்றியும் தவறாக பேசியிருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com