சேலம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூபாய் 2 கோடியில் அதிநவீன மையம். பணிகள் மும்முரம்

சேலம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூபாய் 2 கோடியில் அதிநவீன மையம். பணிகள் மும்முரம்

றிய மக்களின் நோய்களைத் தீர்த்து நலம் தரும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது சேலம் அரசு மருத்துவமனை. சேலம் மட்டுமின்றி  நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் சிகிச்சைக்காக இங்கு வந்து நலம்பெற்று மகிழ்வுடன் திரும்புகின்றர்.  தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நம்பி வருபவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் சிறப்பாக  செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மருத்துவத்துடன் பொது அறுவைச்  சிகிச்சை, மகப்பேறு, இருதயம், நரம்பியல், புற்றுநோய் உள்ளிட்ட 37 துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

       இவற்றுடன் கொடுமையான நோயாக மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கும் நம்பிக்கை அளித்து நோய் தீர்க்கும் மையமாகவும் சேலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் 80க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோய்க்கு என அறுவை சிகிச்சை மருத்துவர்களும், முழுமையான மையமும் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, அறுவைச்சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதுடன் தற்போது அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படுவதால் ஒருங்கிணைத்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாறி வருகிறது சேலம் அரசு மருத்துவமனை.

      மேலும், புற்றுநோய் பிரிவினை நவீனப்படுத்தும் வகையில் லீனியர் கருவி அமைக்கும் பணியும்  நடந்து வருகிறது. அதன் மூலம் சேலம் உள்ளிட்ட சுற்றுப்புற  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வெளி மாவட்டங்களுக்குச் செல்வது குறையும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுடன் அந்நோயின் அறிகுறிகளைக் கண்டறிய சிறப்பு பரிசோதனைகள் மற்றும் இலவச முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதிப்பு உள்ளவர்களைக் கண்டறிந்து உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து புற்றுநோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் வகையில் சிகிச்சை மையமும் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

     இந்தச் சிகிச்சை மையத்தின் கட்டுமான பணிக்காக ரூபாய் 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன அதிநவீன சிகிச்சை  மையத்திற்கான பணிகளை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தினர் மேற்கொள்கின்றனர். அரசு அதிகாரிகள் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்

       “புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வுகளும், சிகிச்சை முறைகளும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ரேடியோ தெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு உடலின் உள்பகுதிகளில் கட்டிகள் இருக்கும். இதனை கண்டறிந்து பிராச்சி தெரபி எனும் சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். இதற்காக புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. புற்றுநோயைக் கண்டறியும் லீனியர் கருவி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முடியும்  நிலையில் உள்ளன. இவை, பயன்பாட்டுக்கு வரும்போது புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக வெளியூர் சென்று அலைய வேண்டியதில்லை.”

இது குறித்து அதிகாரிகள் “சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஒருங்கிணைந்த மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் ரேடியோ தெரபிக்காக அதிநவீன சிகிச்சை அளிக்க மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக காசநோய் ஆய்வக கட்டடத்தை எடுத்து விட்டு புதியதாக இரண்டு கோடியில் கட்டடம் கட்டப்படுகிறது. கருவிகள் கொள்முதலுக்குத் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சிகிச்சை மையம் கட்டுமானப் பணிகள் கருவிகள் அமைக்கும் பணி என அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

     தற்போது சுகாதாரமற்ற வாழ்க்கை முறையினால் பெருகி வரும் புற்றுநோய் குறித்தான அச்சத்தை விடுத்து வாழ்வியல் முறை மாற்றத்தையும் அவ்வப்போது உடல் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்தால் நோய் அபாயம் குறையும். நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தால் சேலம் அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்தை அணுகி நலம் பெறலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com