ஸ்டெமி ரக ஹார்ட் அட்டாக் - ஆண்களை விட பெண்களுக்கு ஆபத்து அதிகம்! மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியின் ஆய்வறிக்கை சொல்லும் செய்தி!
சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டோர், குடிப்பழக்கம் உள்ளவர்கள், 80 வயதைத் தாண்டியவர்கள், தூக்க மாத்திரை உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு 40 சதவீத சைலண்ட் ஹார்ட் அட்டாக வருவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், சமீபகாலமாக அளவுக்கு அதிகமாக பணி செய்பவர்களுக்கும், தூக்கத்தை தொலைத்தவர்களுக்கும் கடுமையான மாரடைப்பை எதிர்கொள்கிறார்கள்.
சமீப காலங்களில் ஹார்ட் அட்டாக்கை எதிர்கொண்ட நான்கு பேரில் ஒருவருக்கு எஸ்டிஇஎம்ஐ (ST-Elevation Myocardial infarction) ரிஸ்க் இருந்திருப்பதாவும், இவர்களுக்கு ஸ்டெமி வகையிலான கடுமையான மாரடைப்பு நிகழ்ந்திருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகப்படியான கொழுப்போ, ரத்த அழுத்தமோ இருந்திருக்கவில்லை.
குறிப்பாக ஆண்களை விட பெண்கள் இதய சம்பந்தப்பட்ட வியாதிகளினால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி வெளியிட்ட ஆய்வறிக்கை குளோபல் ஹார்ட் என்னும் சர்வதேச ஜர்னலில் இடம்பெற்றுள்ளது. அதில் இது குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்டெமி என்னும் கடுமையான மாரடைப்புக்கான சாத்தியக்கூறுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் அதிகமாக இருப்பதாகவும், ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே ஹெல்த் செக் அப் உள்ளிட்ட விஷயங்களில் அனைவரும் குறிப்பாக பெண்கள் போதிய கவனம் செலுத்த ண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக சில விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கு உடல் ரீதியான காரணங்களை விட சமூக காரணங்களே பிரதானமாக இருப்பதாக தெரிகிறது.
பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் மட்டுமே அனைத்து வித மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். பெண்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அலட்சியம் காட்டுகிறார்கள் அல்லது அதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதன் காரணமாக கூட ஆண்களை விட பெண்களுக்கு எதிர்பாராத வகையில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
செப்டம்பர் 2018 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பதால் கொரானா தொற்றுக்கு பிந்தைய நிலையிலிருந்து வேறுபட்டிருக்கிறது
இன்றைய நிலையில் 40 வயதுக்கு குறைவானவர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஹார்ட் அட்டாக் என்பது வயதானவர்களுக்கானது. ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிலைமை மாறி வருகிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தனக்கென தனியிடம் பதித்துள்ளது. உறுப்பு மாற்று பகிர்வு நெட்வொர்க் திட்டமும் சிறப்பான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 3000 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் பெரும்பாலனவை இதய மாற்று அறுவை சிகிச்சைகள் என்கிறார்கள்.