காரை நிறுத்தி கலைஞரின் காலடிபட்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்த முதல்வர்

காரை நிறுத்தி  
கலைஞரின் காலடிபட்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்த முதல்வர்

சேலத்தில் 'களஆய்வில் முதலமைச்சர்' நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மளிகையில் ஓய்வு எடுத்தார். பிறகு அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சேலம்-ஏற்காடு சாலையில் பயணித்தார். அப்போது பழம்பெறும் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவை வழியில் பார்த்தார். காரை நிறுத்தச் சொல்லி இறங்கி மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தார். முதல்வராக இருந்த போதும் எளிமையோடு நின்று, தனது தந்தை கலைஞரின் நினைவுகளால் அவர் செல்பி எடுத்த நிகழ்வை மக்கள் வரவேற்றனர்.

மறைந்த முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர், தனது ஆரம்ப காலத்தில் முதன்முதலாக சம்பளம் வாங்கி வசனம் எழுதி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்தான் மாடர்ன் தியேட்டர்ஸ். அதன் நினைவாக கலைஞர் இருக்கும்போது சேலம் செல்லும்போதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு சென்று வருவார்.

சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ளது. 'மாடர்ன் தியேட்டர்ஸ்'. டிஆர்எஸ் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சுந்தரம் என்பவரால் 1935-ல் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் என்றால் அது இதுதான்.

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு போனதற்கு பெரும்பங்கு ஜெமினி ஸ்டுடியோஸ் போன்றவைக்கு உண்டு என்றால், தமிழ் சினிமாவில் கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற சிறந்த கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்பை வழங்கிய பெருமை 'மாடர்ன் தியேட்டர்ஸ்'க்கு உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம்தான் முதன்முதலாக தமிழில் வண்ணப்படம் வெளியிட்ட பெருமை பெற்றது.

1935-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் முதலில் தயாரிக்கப்பட்ட படம் 'சதி அகல்யா'. தமிழ் சினிமாவுக்கே முன்னோடி இந்த நிறுவனம். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரித்துள்ள இந்த மார்டன் தியேட்டர்ஸ். எம்.ஜி.ஆர், கலைஞர், கவிஞர் கண்ணதாசன், டி.ஆர்.மகாலிங்கம், ஜானகி ராமச்சந்திரன், என்.டி.ஆர். முரசொலி மாறன் என்று பல பெரிய ஆளுமைகள் புழங்கிய இடமாகும். திறமைக்கு முழுமையாக அங்கீகாரம் வழங்கிய இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் 1982-க்குப் பிறகு செயலற்று போனது.

மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் கருணாநிதி, புரட்சி நடிகர் எம்ஜிஆர், வி.என்.ஜானகி என்று 3 பேர், தமிழக முதல்வர்களாகவும் பொறுப்பு வகித்து மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்துள்ளனர். இதில் கலைஞருக்கும், மாடர்ன் தியேட்டருக்கும், சேலம் மண்ணுக்கும் உள்ள பந்தம், காலத்தால் அழியாத கல்வெட்டு போன்றது. அந்த நினைவுகளில் நெகிழ்ந்துதான், நேற்று சேலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

தற்போது அந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் 'தி மாடர்ன் தியேட்டர்ஸ்' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நுழைவு வளைவு மட்டும் அப்படியே உள்ளது. இந்த நுழைவு வாயில் அமைத்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், தற்போது அதனை புதுப்பொலிவுடன் வடிமவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com