கோடைக் காலம் வந்தாச்சு! மளிகைப் பொருட்களின் வரத்தும் தொடங்கியாச்சு!

கோடைக் காலம் வந்தாச்சு!  மளிகைப்   பொருட்களின் வரத்தும் தொடங்கியாச்சு!

ரப்போகிறது கோடைக்காலம். அடிக்கும் வெயில் ஒருபக்கம் இருந்தாலும் வீட்டுக்குத் தேவையான மிளகாய் பருப்பு, மிளகு, ஜீரகம் போன்ற மளிகைகளை வருடத்திற்குத் தேவையானவற்றை வாங்கும் தருணமும் இதுவே. கோடையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மளிகைப்பொருள்களை வாங்கி அவற்றை வெயிலில் காயவைத்து தகுந்த பராமரிப்புடன் சமையலறையில் சேர்த்து வைப்பது இல்லத்தரசிகளுக்குப் பிடித்தமான ஒன்று. இதோ இந்த வருடமும் கோடை துவங்கியாயிற்று. கூடவே மளிகைகளின் வரத்தும், அது பற்றிய சிறிய செய்தி இதோ...

இந்தியாவில் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் குஜராத் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் துவரை, உளுந்து, மிளகாய், கொத்தமல்லி, பச்சைப்பயிறு. கொண்டைக்கடலை. கடலைப்பருப்பு வகைகள், பூண்டு, ஏலக்காய், முந்திரி, திராட்சை, கசகசா, பட்டை, லவங்கம், வெந்தயம், சோம்பு, மிளகு. கடுகு உள்ளிட்டவைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதேபோல் தமிழகத்தில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பல, இடங்களில் பச்சைப்பயிறு உளுந்து, தட்டைப்பயிறு, அவரைக் கொட்டை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் முடியும் பிப்ரவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும் இப்பயிர்களையும் தானிய வகைகளையும் இங்குள்ள விவசாயிகள் சுத்தம் செய்து இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதேபோல் இந்த ஆண்டும் பிப்ரவரி துவங்கிய கடந்த ஒருவாரமாக புதிய மளிகைப் பொருள்கள் மற்றும் தானிய வகைகளின் வரத்து மார்க்கெட்டுகளில் உள்ள மளிகைக் கடைகளுக்கு வரத்துவங்கியுள்ளது வட மாநிலங்களிலும்  சீசன் களைக்கட்டி உள்ளதால் சேலம் மார்க்கெட்டுக்கு புது மளிகை பொருட்களின் வரத்து 20% வரை அதிகரித் துள்ளது. சேலம் பால் மார்க்கெட், லீ பஜார், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பஜார் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் புது மளிகை பொருட்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

து குறித்து சேலம் செவ்வாய்பேட்டை மளிகை மொத்த வியாபாரிகள் கூறியதாவது “ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் புது மளிகை பொருட்களின் வரத்து துவங்கிவிடும். நடப்பாண்டு முதல் மளிகை பொருளாக குண்டூர், நெல்லூர், குளத்தூர், விளாத்திகுளம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மிளகாய் சீசன் வரத்துவங்கி விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடந்த ஆண்டு நல்ல முறையில் பருவ மழை கை கொடுத்துள்ளது. ஒரு சில பகுதிகளில் அதிக மழையால் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. எனினும்  அழிவைக் காட்டிலும் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் தானிய வகைகளின் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி முடிந்து புது மளிகை பொருட்களின் வரத்து அதிகரிக்கும். அதனால் மார்ச் ஒன்றாம் தேதி முதல் வரத்து எண்பது சதவீதமாக இருக்கும். சீசன் இல்லாத நேரத்தில் விற்கப்படும் விலையில் மளிகை பொருட்கள் விற்கப்படுகிறது. மளிகை பொருட்களின் வரத்தைப் பொறுத்தே  விலை நிலவரமும்  இருக்கும். நல்ல விளைச்சல் இருப்பதால் வரத்து நல்ல முறையில்தான் இருக்கும். அதனால் நடப்பாண்டு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் குறிப்பிட்ட ஒரு சில மளிகை பொருட்களின் விலையும் ஏறும் என்று வட மாநில வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது புது மளிகை பொருட்களின் வரத்து துவங்கி உள்ளதால் சேலம் மாநகரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கடைகளுக்கு வருகை தருகின்றனர்.

அதே நேரத்தில் அயோத்தியாபட்டினம் காரிப்பட்டி வாழப்பாடி ஆத்தூர் பெத்தநாயக்கன் பாளையம் தலைவாசல் சின்ன சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மார்ச் ஒன்றாம் தேதிக்கு மேல் அதிக அளவில் வருகை தருவார்கள். நடப்பாண்டு வழக்கம்போல் பெங்களூர் காரைக்கால் ரயில் இயக்கப்படுவதால், இது மளிகை பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர் களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்” என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் அவசரத்திற்கு 100கிராம் 200கிராம்  என்ற அளவுகளில் மளிகைப் பொருள்களை வாங்குவதை விட ஆண்டு முழுவதுக்கும் ஒட்டுமொத்தமாக வாங்கி சேமித்து வைப்பது பணத்தையும் மிச்சப்படுத்தும். சமையலின் டென்சனையும் குறைக்கும். என்ன, பொருள்களை காயவைத்து எடுத்து வைக்க  நேரம் மட்டுமே சற்று கூடுதலாகத் தேவைப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com