2 கோடி ரூபாய் சொத்து மற்றும் நகைகளை புற்று நோய் மையத்துக்கு எழுதி வைத்து விட்டு உயிரிழந்த சுந்தரி பாய்!
ஆவடி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராகவன், குப்பம்மாள் தம்பதியினருக்கு 4 பிள்ளைகள் இருந்த நிலையில் யாருக்கும் திருமணமாகவில்லை என்பதாகத் தகவல். இவர்களில் கடைசி வாரிசு சுந்தரி பாய் என்பவரது அக்கா ஜானகி கடந்த ஃபிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து ஃபிப்ரவரி 17 ஆம் தேதி சுந்தரி பாயும் உயிரிழந்தார். இவர் உயிரிழக்கும் போது எழுதி வைத்த உயிலின் படி இவர்களுக்குச் சொந்தமான வீடு, 54 சவரன் நகைகள் மற்றும் வங்கி & தபால் நிலைய சேமிப்பில் இருக்கும் 61 லட்சம் ரூபாய்கள் என இவர்களது சொத்துக்கள் அனைத்துமே காஞ்சிபுரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தைச் சேர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் படி சுந்தரி பாய் இறந்ததுமே விழிஞ்சியம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி தலைமையில் இந்தப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு உரிய அதிகாரிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீல் வைத்த நிலையில் திருவள்ளூர் கருவூல அறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் இச்சம்பவம் குறித்து தகவல் வெளியான நிலையில் பொதுமக்களில் பலர் இறந்து போன அந்தக் குடும்பத்தினருக்கும், பொது நல நோக்குடன் இப்படி ஒரு உயிலை எழுதி வைத்த சுந்தரி பாய் அம்மாளையும் பலவிதமாக வாழ்த்தி வருகின்றனர்.
ஆயினும் சிலர், உயில் எழுதிய நல்ல ஆத்மாவுக்கு நன்றி, ஆனால், இந்த விஷயத்தில் சில கெட்ட நோக்குடைய அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தலையிட்டு அந்த நல்லவர்களின் எண்ணம் முழுதாக ஈடேறாமல் செய்து விடக்கூடாதே என்று எதிர்மறையாகவும் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.
சுந்தரி பாய் எழுதி வைத்த 2 கோடி ரூபாய் சொத்துக்கள் அவர் என்ன நோக்கத்திற்காக உயில் எழுதி வைத்தாரோ அதே நோக்கத்திற்காக முழுமையாகப் பயன்படட்டும் என்று பலர் வேண்டுதல் விடுத்திருக்கும் நிலையில் அவ்வண்ணமே நிகழ கடவுள் மனது வைக்கட்டும் என்றும் சிலர் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த உலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது வள்ளுவர் வாக்கு.அதற்கேற்ப சுந்தரி பாயின் குடும்பத்தினர் செய்த இந்த நற்செயல் சமூகத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்டு பொருளாதார வசதியின்றியும் சிகிச்சை பெற வழியின்றியும் அவஸ்தைப்படும் எண்ணற்ற ஏழைகளுக்கு உதவக்கூடும்.