அசுர வேகம், தினமும் ஒரு சர்ச்சை – யார் இந்த டிடிஎப் வாசன்?

டிடிஎப் வாசன்
டிடிஎப் வாசன்

வாசன் என்றால் நமக்கு ஜி.கே வாசனைத்தான் தெரியும். ஆனால், மில்லினியத்தில் பிறந்தவர்களுக்கு வாசன் என்றால் அது டிடிஎப் வாசன். தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ஏனோ மயங்கிக் கிடக்கிறார்கள். அவரது பெயரை கைகளில் பச்சை குத்திக் கொள்கிறார்கள். மொபைல் போனோடு செல்பி எடுக்க பைக்கில் துரத்துகிறார்கள்.

யார் இந்த டிடிஎப் வாசன்? மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 22 வயதான யூடியூபர். இந்தியா முழுவதும் பைக்கில் அதிவேகமாக பயணம் செய்கிறார். ஹெல்மெட்டில் உயர்தர காமிராவை வைத்திருக்கிறார். வீடியோக கேம்ஸ் பார்ப்பது போல் ஒரு சாகச பயணத்தை அவரது காமிரா பதிவுகள் தருகின்றன.

அத்தனையையும் வீடியோவாக்கி யூடியூப்பில் வெளியிடுகிறார். இதுவரை 800 வீடியோ வெளியாகியிருக்கிறது. ஏகப்பட்ட வியூஸ்! வீடியோவில் தன்னுடைய பயண அனுபவங்களை சென்டிமெண்டாக விவரிக்கிறார். நடுநடுவே வாழ்வியல் தத்துவங்களையும் உதிர்க்கிறார்.

மில்லினியம் கிட்ஸ் ஏனோ உருகுகிறார்கள். பயணத்தின் போது தான் சந்திக்கும் சாமானியர்களோடு நெருங்கிப் பழகுகிறார். கையில் இருக்கும் பணத்தையும் அவர்களுக்கு தானமாகக் கொடுத்துவிடுவார். எந்த மாநிலமாக இருந்தாலும், அவரை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மொய்க்கிறார்கள்.

சென்ற ஆண்டு, தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட கோவையிலிருந்து லடாக் நோக்கி பைக்கில் அதிவேகமாக பயணம் செய்தார். அங்கிருந்து ஏராளமான வீடியோக்களை வெளியிட்டார். அத்தனையும் வைரலானது. அசுர வேகம், அசாத்திய சாகசம். அதுதான் வாசன்!

இந்த ஆண்டு, மேட்டுப்பாளையத்தில் தன்னுடைய சொந்த வீட்டில் பிறந்த நாள் கொண்டாடினார். 100 பேர் தன்னை வாழ்த்த வருவார்கள் என்று காவல்துறையினரிடமும் அனுமதி வாங்கியிருந்தார். ஆனால், மேட்டுப்பாளையமே மிரளுமளவுக்கு கூட்டம் வந்தது.

சமீபத்தில் கமலா தியேட்டரில் சினிமா பார்க்க பெங்களூரிலிருந்து வந்திருக்கிறார். அவரது காரில் நம்பர் பிளேட் இல்லை. சென்னை வந்தபின்னர் எப்படியோ காவல்துறை அவரை துரத்தி வந்து வழக்கு பதிவு செய்கிறது. எங்கே சென்றாலும் வம்பு, வழங்குகள் இல்லாமல் வீடு திரும்புவதில்லை

இன்றைய நிலையில் விஜய், அஜீத்தை விட டிடிஎப் வாசனுக்கு திரளும் இளசுகளின் எண்ணிக்கை அதிகம். விஜய்க்கு போட்டியாக கூட்டத்துடன் செல்பி எடுக்கிறார். அஜீத் குமார் போல் பைக்கில் சாகசம் செய்கிறார்.

‘என்னுடையது பைக் ரேஸ் அல்ல. பைக் பயணம்தான். பெட்ரோல் போடுவதற்கே காசில்லாதவனாக இருந்தேன். யூடியூப் மூலமாகத்தான் எனக்கு வருமானம் வருகிறது’ என்கிறார். நம்புவது கஷ்டம்தான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். மில்லினியம் கிட்ஸ் நம்புகிறார்கள். நமக்கேன் வம்பு?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com