அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம், அதிர்ந்து போன பெட்ரோல் நிலையங்கள்


அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம், அதிர்ந்து போன பெட்ரோல் நிலையங்கள்

ந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 'வேப்பர் ரெக்கவரி' என்ற தொழில்நுட்ப முறை கட்டாயம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

‘வேப்பர் ரெக்கவரி’ சிஸ்டம் என்பது கச்சா எண்ணெய் அல்லது பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் தொட்டியிலிருந்து வெளியேறும் தேவையற்ற எரிபொருள் ஆவியை தூய்மையாக்கும் ஓர் அமைப்பாகும். 

பெட்ரோல் நிலையங்களில் பொதுவாகவே எரிபொருட்கள் ஆவியாக மாறி காற்றில் கலக்கும். குறிப்பாக வெயில் காலங்களில் அதிக எரிபொருள் ஆவியாக மாறி காற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசுவை அதிகரிக்கிறது. இவ்வாறு ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக இந்தியாவிலுள்ள அனைத்து மாநில பெட்ரோல் நிலையங் களிலும் 'வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்' என்ற தொழில்நுட்பம் அமைக்க வேண்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2020இல் வழிகாட்டு நெறிமுறைகள் சிலவற்றை வெளியிட்டிருந்தது. 

இதனால் பல மாநில எரிபொருள் நிலையங்களிலும் இந்த தொழில்நுட்பம் நிறுவப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் இது சார்ந்து எவ்வித முயற்சியும் எடுக்கப்படாமலேயே இருந்தது. இது குறித்து சென்னை வழக்கறிஞர் ஒருவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இதில், தமிழகத்தில் புதியதாகத் தொடங்கும் பெட்ரோல் நிலையங்களில் வேப்பர் ரெக்கவரி சிஸ்டம் கட்டாயம் அமைக்க வேண்டுமென்றும், ஏற்கனவே உள்ள பெட்ரோல் நிலையங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த சிஸ்டம் நிறுவப்பட வேண்டும் எனவும் கோறியிருந்தார். 

இதை விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், புதிய பெட்ரோல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்பே வேப்பர் ரெகவரி சிஸ்டம் கட்டாயம் இருக்க வேண்டும். இதை கடைபிடிக்காத எரிபொருள் நிலையங்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து எண்ணெய் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனுவை விசாரணை செய்த, ஜே.பி பர்திவாலா மற்றும் சுதான்சு துலியா என்ற இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, "சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் "வேப்பர் ரெக்கவரி சிஸ்டம்" என்ற தொழில்நுட்பம் அமைக்கப்பட வேண்டும். இதைக் குறிப்பிட்ட காலவரம்புக்குள் அனைவரும் செயல்படுத்த வேண்டும். இதை செயல்படுத்தாத எரிபொருள் நிலையங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சரியாக அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதா, சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஒவ்வொரு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நல்ல முறையில் கண்காணிக்க வேண்டும்" எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். 

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கத் தானே இதை நிறுவ சொல்கிறார்கள். இதை செயல்படுத்துவதில் எண்ணெய் நிறுவனங்களுக்கு என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com