தமிழக பட்ஜெட்: புதிய சுற்றுலாக் கொள்கை, நிதியமைச்சரின் தடுமாற்றமும், அரசின் தாமதமும்!

தமிழக பட்ஜெட்: புதிய சுற்றுலாக் கொள்கை, நிதியமைச்சரின் தடுமாற்றமும், அரசின் தாமதமும்!

2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கிறார். அதில் சுற்றுலாத்துறை குறித்த சில அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள நிதியமைச்சர், பிச்சாவரம் பூம்புகார் மற்றும் ஒகேனக்கல் ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த 55 கோடி ஒதுக்கீடு செய்வதாக குறிப்பிட்டார்.

கொரானா தொற்று பரவல் நேரத்தில் இந்தியாவிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட துறையாக, சுற்றுலாத்துறை இருந்தது. கொரானாவிலிருந்து மீண்டெழுந்து வந்த காலத்திலும் சுற்றுலாத்துறையால் பழைய நிலையை எட்ட முடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரானா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட துறையாக சுற்றுலாத்துறை தொடர்ந்து இருந்து வருகிறது.

புதிய சுற்றுலாக் கொள்கை உருவாக்கப்படும் என்று சென்ற ஆட்சியிலேயே அறிவிக்கப்பட்டது. தி.மு.கவும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டிருந்தது. முதல் பட்ஜெட் அறிக்கையிலேயே புதிய சுற்றுலாக் கொள்கை கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் புதிய சுற்றுலாக்கொள்கை வெளியிடப்படாதது, தமிழகத்திற்கு பின்னடைவுதான். தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆய்வுகளிலும் தமிழகத்தின் சுற்றுலாத்துறை பின்தங்கியிருப்பது பல்வேறு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பெருநகரங்களை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை என்ற வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட போவதாக அறிவித்திருக்கிறார். கூடவே செம்மொழிப் பூங்காவும் உருவாக்கப்பட இருக்கிறது.

சோழப் பேரரசின் வரலாற்றை போற்றுவதற்கு தஞ்சாவூரில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தவும் புதிய திட்டங்கள் வரவிருக்கின்றன.

பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பத்து கோயில்களும், தரங்கம்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை பழுது பார்க்கப்படும் என்று முன்னர் தமிழக தொல்லியல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அருங்காட்சியத்தில் உள்ள கலைப்பொருட்களை பழுது பார்க்கவும், இன்னும் நிறைய பார்வையாளர்கள் அருங்காட்சியகத்திற்கு வருவதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படும் என்றார்கள். பட்ஜெட்டில் அது குறித்த செய்திகள் ஏதுமில்லை.

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கும், ஊட்டி, ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் பிற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டியிருக்கிறது. கோயில்களை பழுது பார்ப்போடு, தர்கா, தேவாலயங்கள் உள்ளிட்டவற்றின் மேம்பாட்டிற்கும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், வரலாற்று நோக்கில் தமிழகத்தை தேடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமானவை இருக்கின்றன.

புதிய சுற்றுலாக் கொள்கை பற்றிய அறிவிக்கும்போது, நிதியமைச்சர் தடுமாறிவிட்டார். புதிய கொள்கை இனிதான் உருவாக்கப்படவேண்டுமா அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டதா என்பதில் தெளிவு இல்லை. புதிய சுற்றுலாக் கொள்கை தயாராகிவிட்டது, கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார்கள், ஆளுங்கட்சியினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com