பிளாஸ்டிக் தடையில் தளர்வு கோரும் தமிழக அரசு - நெகிழ ஆரம்பித்திருக்கிறதா, பிளாஸ்டிக் பொருட்களின் தடை?
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்த விஷயத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் வெளியான அரசாணையை திருத்த முடிவு செய்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பால், பிஸ்கெட், மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கூட தடை விதிக்கப்பட்டிருப்பதால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அத்தியாவசியப் பொருட்களில் பிளாஸ்டிக் உறைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டிருப்பதால் முழுமையாக தடை செய்வது சாத்தியமில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது. ஆனாலும், இது குறித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வந்தன.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 36 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழக அரசின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
2018ல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் எவற்றை பயன்படுத்தலாம், எவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது சரியாக விளக்கப்படவில்லை. மிகக் குறைந்த தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாமா? அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் தெளிவில்லாத நிலை இருந்தது. இதன் காரணமாக பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த தனிக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
2020 ஜீன் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்றால், பிளாஸ்டிக் உறைகளுக்கான மாற்று ஏற்பாடுகளை கண்டறிந்தாக வேண்டும். மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் தடை விதிப்பதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் பயன்பாடுகளில் சிரமம் ஏற்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து வந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களும் வீழ்ச்சியை அடைந்திருப்பதாகவும் தமிழகத்தின் பொருளதார வளர்ச்சிக்கு காரணமாக இருந்த இத்தகைய தொழில் நிறுவனங்கள் ஏறக்குறைய 3200 கோடி சம்பந்தப்பட்ட ஒரு தொழில் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிள்ள வழிமுறைகளின்படியே தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடும் மறு சுழற்சியும் செய்யப்படுகின்றன. மத்திய அரசு கூட பிளாஸ்டிக் உறைகளை தடை செய்வது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை. முழுமையான தடை நடைமுறைக்கு வருவதற்கு பத்து ஆண்டுகளாகும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை பொறுத்து, பிளாஸ்டிக் தடை விஷயத்தில் தமிழகத்தில் சில தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.