மீண்டும் சர்ச்சையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

மீண்டும் சர்ச்சையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசும் கருத்துகள் யாவும் சமீப காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. திருக்குறள் மொழி பெயர்ப்பு விவகாரத்தில் ஜியு போப்பை விமர்சித்துப் பேசியது, தமிழ்நாடு பெயர் குறித்த இவரின் முரண்பட்ட கருத்து, அவரது சனாதன தர்மம் குறித்த பேச்சுகள் யாவும் தமிழக மக்களிடையே பெரும் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை ராஜ்பவனில் இந்துத்துவா கோட்பாட்டாளர் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள், தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனித நேயம் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஆளுநர் ரவி, “சனாதன தர்மம் என்பது விரிவானது. ஆனால், தர்மம் என்பதை நாம் மதம் என புரிந்து கொண்டுவிட்டோம். அப்படிப் புரிந்து கொண்டதால் மாபெரும் தவறு செய்துவிட்டோம்.

மேலும், நமது இந்தியக் கொள்கைகள் மேற்கத்திய சிந்தனையை தொடர்ந்ததாக இருந்தது. டார்வின் கோட்பாடு, மார்க்ஸின் சித்தாந்தம், இறையியல், ரூசோ கோட்பாடு என்பவை எல்லாம் இந்தியாவின் தேசியத்துவ வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தின. இந்தியாவை கார்ல் மார்க்ஸின் சிந்தனை சிதைத்துப் போட்டது. ஆனால், அந்த சிந்தனை இப்போது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மார்க்ஸின் சித்தாந்தமானது, ‘இல்லாதவர்கள் மேலே உயர வேண்டும்’ என்கிறது. இது இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான மோதலை உருவாக்குகிறது. இது சமூகத்தில் பிளவுகளுக்குக் காரணமாகவும், நிரந்தரமான மோதலையும் உருவாக்கக் கூடியது.

அதேபோல, ஜனநாயகத்துக்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கனை காட்டுகிற போக்கும் இருக்கிறது. டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை பின்பற்றுகிறார்கள். இவை அனைத்துமே நமது மேற்கத்திய அடிமை நிலையின் வெளிப்பாடுதான். இந்தியப் பேராசிரியர்கள் ஐரோப்பியத் தத்துவத்தை உயர்த்திப் பிடிப்பது வேதனைக்குரியது’’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார். ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு, இடதுசாரி எம்பி சு.வெங்கடேசன் அளித்துள்ள பதிலில், “ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே! ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாதபோது… புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமைதான்” என்று வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரிடம் இருந்தும் கண்டன விமர்சனங்கள் பகிரப்படுகின்றன.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com