‘தமிழ்நாடு என்ற பெயர்தான் உங்களை இணைக்கும்!’
- சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா

‘தமிழ்நாடு என்ற பெயர்தான் உங்களை இணைக்கும்!’ - சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா

சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு இணைந்து நடத்திய விழாவில் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா மற்றும் பேத்தி எஸ்டெபானி குவேராவுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியும், சோசலிச கியூபாவுக்கு தமிழக மக்களின் ஆதரவை தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சேகுவேராவின் மகள் அலெய்டா, “நான் சேகுவேராவின் மகளாக இருப்பதால் அதிக அன்பைப் பெற்றேன். ஆனால், நான் யாருடைய மகள் என்பது முக்கியமில்லை, நான் யாராக இருக்கிறேன் என்பதுதான் முக்கியம். அத்துடன் சேகுவேரா மகளாக இருப்பதிலும் நான் பெருமைப்படுகிறேன். இந்தியாவில் நான் எங்கு போனாலும் என் மூக்கு வரை மாலைகள் இருக்கும். இன்று, நீங்கள் எனக்கு அளித்த இந்த சால்வைகள் மூலம் உங்களின் அன்பை என்னால் உணர முடிந்தது. நாம் இங்கு கூடியிருப்பது ஒற்றுமைக்காக… ஒருமைப்பாட்டுக்காக. நாம் என்ன செய்தாலும் அதிலே ஒரு பொது நோக்கம் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

நான் இந்த நாட்டின் பெயர் என்னவென்று உரக்கச் சொல்லச் சொன்னபோது, தமிழ்நாடு என்று உரக்கக் குரல்கள் கேட்டன. இன்று இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு என்ற பெயர்தான் உங்களை இணைக்கிறது. அதேபோல், எந்த பொது நோக்கமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இன்று நாம் வாழும் இந்த உலகம் ஏராளமான முரண்பாடுகள் சூழ்ந்ததாக இருக்கிறது. இது ஒரு மேம்பட்ட உலகமாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் நீங்களும் போராடுகிறீர்கள், நாங்களும் போராடுகிறோம். தூரம் என்பது இந்தியாவுக்கும் கியூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் ஆனால், கியூபா மக்களும் இந்திய, தமிழக மக்களும் சகோதரர்கள்தான். என் தந்தை சேகுவேரா இறந்தபோது, பலரும் அழுதனர். ஒருவரை இழந்தால் உலகம் வருத்தப்படும் என்பது உண்மைதான், வருத்தத்தை கண்ணீரால் மட்டுமல்ல, போராட்டத்தின் மூலமாகவும் வெளிப்படுத்த முடியும். நான் இறந்தால் எனக்காக யாரும் அழாதீர்கள். நான் விட்டுச் செல்லும் பணியை தொடருங்கள். உங்களில் நான் இருப்பேன். ஒருமைப்பாட்டுக்காக ஒன்றுபட்டு நாம் குரல் எழுப்புவோம்” என்றும் அவர் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கியூபா ஒருமைப்பாட்டு குழுவின் இந்திய தலைவர் பேபி, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் கோபண்ணா, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஹெச் ஜவஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், கனிமொழி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com