தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு!

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் வரும் ஜூலை 14 முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டம் நடத்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 14 முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் உள்ள சங்கங்களுடன் இணைந்து வரும் ஜூன் மாதத்தில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதெனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் உட்பட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தை முன்பு போல் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடமாக மாற்ற வேண்டும்.

தொடக்கக் கல்வித்துறை முன்பு போல் தனித்துவத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க வேண்டும்.

பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றைத் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வழங்கிட வேண்டும்.

ஆசிரியர்களின் உயர் கல்விக்கான பின்னேற்பு அனுமதி உடனடியாக அளிக்கப்பட வேண்டும்,

ஆசிரியர்களின் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறுவதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும்.

மாநிலம் முழுவதும் விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல்களை ரத்துச் செய்திட வேண்டும்,

தொடக்கக்கல்வி இயக்குநர் மட்டத்தில் அளிக்கப்பட்டு உள்ள மனுக்களின் மீது உரிய தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com