“பெண்களைச் சமமாக மதிக்க ஆண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்” - நடிகை ரோகிணி வேண்டுகோள்!

“பெண்களைச் சமமாக மதிக்க ஆண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்” 
- நடிகை ரோகிணி வேண்டுகோள்!

மிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி… குணச்சித்திர நடிகை… எளிமையானவர் நடிகை ரோகிணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ‘தேசிய விருது’ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். நடிப்பதுடன் எழுதுவதிலும் பெரும் ஆர்வம் என்பதால் சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். பிரச்னைகளுக்குத் துணிவாகக் குரல் தருபவர் எனும் நற்பெயரையும் பெற்றுள்ளார். பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்து பெண்களுக்கு ஆதரவு தருபவர். தர்மபுரியில் இவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் ‘ஆண் குழந்தைகளுக்கு எதைக் கற்றுத் தந்தால் நல்லது’ என்று அவரது பேச்சில் குறிப்பிட்டுள்ளதைப் பார்ப்போம்.

நேற்று முன் தினம் (3-5-23) இரவு தர்மபுரி பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அம்பேத்கர் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் சிங்காரவேல் வரவேற்றார். ‘கலையும் வாழ்வும்’ என்ற தலைப்பில் திரைப்பட நடிகை ரோகிணி, சனாதானமும் சமூகநீதியும் குறித்துப் பேசினார்.

“பெண்கள் சாதி மாறி திருமணம் செய்துகொண்டால், அவரது குடும்பத்தாரே அந்தப் பெண்ணை கொலை செய்துவிடுகின்றனர். சமூகத்தில் பெண்களை ‘மலரே’, ‘மானே’, ‘தேனே’ என்று வர்ணிக்கின்றனர். பெண்கள் அரிவாள் எடுத்தாலும் வெட்டும்; ஆண்கள் தோசை சுட்டாலும் ஒன்றும் ஆகாது. பெண்கள் எடுத்தாலும் பிளைட் ஓடும், ராக்கெட் பறக்கும், சந்திரமண்டலத்தில் காலடி வைத்தாலும் அவை ஏற்றுக்கொள்ளும். பெண் என்பதால் புறக்கணிக்காது.

பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக அம்பேத்கர், பெரியார் ஆகியோர் போராடினர் குடும்பத்தில் உள்ள பெண்களைச் சமமாகப் பார்க்கவும் மதிக்கவும் முதலில் ஆண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ‘வாச்சாத்தி’ கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அந்தப் பெண்கள் நிகழ்த்திய நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் விளைவாக பல ஆண்டுகாலம் கழித்து நீதி கிடைத்தது. அந்த மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை ஆனால், குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காமல் இருக்க அடுத்த தலைமுறைக்கு இது போன்ற கொடுமைகளைச் சொல்ல வேண்டும்” என்று பேசியுள்ளார்.

ரோகிணி கூறுவதுபோல் நம் குடும்பத்தில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு அவரவர் அம்மாக்கள் சகபெண்களைச் சமமாக மதிக்க கற்றுத்தருவதே பெண்களின் மீதான ஆண்களின் ஆதிக்கம் மாற வழியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com