முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

”டீம் வொர்க் தான் வெற்றிக்கு காரணம்” - அதிகாரிகளை பாராட்டித் தள்ளிய முதல்வர். திட்டங்களை நிறைவேற்றக் காலக்கெடு!

அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் தலைநகரிலும், மாவட்ட அளவிலும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆய்வுக்கூட்டங்களில் முதல்வர் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் நேரடியாகக் கலந்தாலோசித்து வருகிறார். தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் அவருடன் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆட்சிக்கு வந்தபின்பு, கடந்த 20 மாத காலத்தில் நிறைய திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றையெல்லாம் ஆர்வத்தோடு நடைமுறைப்படுத்துவதோடு, தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகளுக்கு மனம் திறந்து முதல்வர் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

அரசு என்பது முதலமைச்சர் மட்டுமல்ல, அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் இணைந்ததே. இம்மூன்று பகுதிகளும் ஒன்றாக இணைந்து ஒருமுகப்பட்டுச் செயல்படுவதே நல்லாட்சியாக அமைந்திட முடியும்.

நல்லாட்சியை நாம் நடத்தி வருகிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு இந்த காலகட்டமானது மனநிறைவை அளித்துள்ளது என்பதை வெளிப்படையாகவே உங்களிடம் நான் தெரிவிக்க விரும்புகிறேன் என்று பேசியிருக்கிறார்.

கடந்த 20 மாதங்களில் ஏராளமான புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறோம். அவையெல்லாம் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை கண்காணிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், எதாவது தடைக்கல் இருந்தால் அவற்றைக் களைய வேண்டும் என்றார்.

ஒரு திட்டத்துக்கு எங்காவது ஒரு இடத்தில் சிறு தடங்கல் இருக்கலாம். அந்த தடங்கல் உங்களுக்குத் தான் தெரியும். நிதித்துறையிலோ அல்லது பிற துறைகளில் இருந்தோ ஏதாவது ஒரு உத்தரவு வர வேண்டியதாக இருக்கலாம்.

அதிகாரிகள் மட்டத்திலே கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அதிகாரிகளையும் பங்கேறும் கூட்டுக்கூட்டமாக அதை நடத்தி உடனடியாக அதனைச் செயல்படுத்தி வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

உங்கள் துறைக்கான அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் பரிசீலனை செய்து, அவை எந்தளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் ஆய்வு செய்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை தந்திருக்கிறார்.

ஒவ்வொரு திட்டத்தையும், அறிவிப்பையும் உங்கள் கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்யுங்கள். திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதி ஒதுக்கீடு செய்வதில் தடைகள் ஏற்படலாம்.

2023-ம் ஆண்டுக்குள் அனைத்துத் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன என்ற நிலையை எட்டியாக வேண்டும். அதற்கான பணிகளை இன்றே தொடங்க வேண்டும். சேர்ந்து செயல்படுவோம் என்று உற்சாகமாக பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து முதல்வர், 2023க்குள் அனைத்து திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்று கெடு விதிக்கிறாரோ என்று இணையத்தில் விமர்சிக்கப்படுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com