உண்மையைச் சொல்லுங்கள், நேர்மை மிகவும் முக்கியம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

உண்மையைச் சொல்லுங்கள்,  நேர்மை மிகவும் முக்கியம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று, இம்மாதம் 30ம் நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 'எண்ணித் துணிக' என்ற உத்வேகமூட்டும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தர்பார் ஹாலில் நடத்தினார். இதில் இந்தியா முழுவதிலும் இருந்து இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற 80 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த மாதம் 30ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது குறித்து உங்கள் அனைவருக்கும் தகவல் தெரிந்திருக்கும். இந்த நேர்முகத்தேர்வு உங்களைப் பற்றியது. உங்களிடம் கேட்கப்படும் கேள்வியை நீங்கள் எந்த விதத்தில் அணுகி பதில் அளிக்கிறீர்கள் என்பது பற்றியதுதான்.

அடுத்து, உங்கள் உடையில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். நீங்கள் யாரையாவது சந்தித்து பேசும் போது உங்களிடம் சகஜமாக பேச தோன்ற வேண்டும். உங்களுக்கு பொருத்தமாக இருக்கக் கூடிய உடைகளை தேர்வு செய்து கொள்ளுங்கள். வெளி நபர் உங்களைப் பார்க்கும் முதல் பார்வையிலே நீங்கள் presentable ஆக இருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்கு வேகமாக பதில் அளிக்க வேண்டியதில்லை. முதலில் கேள்வியை கவனியுங்கள். சில நிமிடங்கள் யோசித்து பதில் அளியுங்கள்.

 ஒவ்வொரு செய்தித்தாள் செய்தியும் யாரோ ஒருவரின் கருத்து. உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். (difference between Opinion and opinionated). நீங்கள் சமூக ஆர்வலர்கள் இல்லை. ஐஏஎஸ் அதிகாரியாக யோசித்து செயல்பட வேண்டும்.

உதாரணமாக யாராவது மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் பற்றி கேட்டால், இந்த திட்டம் தேசத்தில் வறுமையில் உள்ளவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம். இதன் மூலம் வறுமையில் உள்ளவர்களையும் ஊதியம் பெற செய்வதால், அதன் மூலம் அவரின் வாழ்வு மேம்படும். எனவே இது நல்ல திட்டம்.

 உங்களுக்கு கேள்விகளுக்கு பதில் தெரியாமலும் போக வாய்ப்புள்ளது. கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், கவலை பட வேண்டாம். தெரியாது என்று பதில் சொல்லாமல் புன் முறுவலுடன் அதனை எதிர்கொள்ளுங்கள்.

பதில் தெரியாத கேள்விக்கு, இந்த கேள்விக்கான பதிலுக்கு தேவையான தரவுகள் என்னிடம் இல்லை என்று புன்முறுவலுடன், பதற்றமில்லாமல் சொல்லுங்கள்.

 4 வது முறையாக நேர்முகத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு தேர்வர், ‘ஒரு ஐஏஎஸ் தேர்வரிடம் எதிர்பார்ப்பது என்ன?’ என்ற கேள்வி எழுப்பினார்.

 அதற்கு பதில் அளித்த ஆளுநர்,  Upsc ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரியைதான் எதிர்பார்க்கிறது… சமூக சீர்திருத்தவாதியை அல்ல... ஒரு பிரச்னையை, கேள்வியை ஐஏஎஸ் அதிகாரி எப்படி எதிர்கொள்கிறார் என்பது முக்கியம்.

ஒரு அதிகாரியாக எப்படி செயல்பட வேண்டும், அமைதியாக , கோப்படாமல் உங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை கோபத்துடன் வெளிக்காட்டாமல் மிகவும் மென்மையாக பக்குவமாக வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

 அடுத்து ஒருவர் , பொறியியல் துறை படித்தவர்களிடம் அறிவியல் சார்ந்த கேள்வி எழுப்பப்பபடும் போது எப்படி 100% தெரியாமல் பதில் அளிப்பது என்று கேள்வி எழுப்பினார்.

 அதற்கு ஆளுநர், நீங்கள் பொறியியல் துறையில் தேர்வு பெற்றவர். மற்றவை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உண்மையை சொல்லுங்கள் எனக்கு முழுமையாக தெரியாது என்று. நேர்மை மிகவும் முக்கியம் என்று கூறினார்.

ஆந்திராவில் இருந்து வந்த ஒரு தேர்வர், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் , உச்சநீதிமன்றத்துக்கும் கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு இருக்கும். இதில் நான் எதை பின்பற்றுவது?

 ஆளுநரின் பதில், “குழப்பம் வேண்டாம். நீங்கள் மத்திய அரசு பக்கம்தான் செயல்பட வேண்டும். மத்திய அரசு மூலம் இந்திய குடிமைப் பணிகள் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டவர்கள் நீங்கள்” என்று ஆளுநர் ரவி 'எண்ணித் துணிக' என்ற உத்வேகமூட்டும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com