மத்திய பட்ஜெட் ஆச்சு, அடுத்து மாநில பட்ஜெட். என்ன செய்யப்போகிறார், பழனிவேல் தியாகராஜன்?
2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் சீசன் ஆரம்பமாகிவிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அடுத்து வரும் ஒரிரு வாரங்களில் தமிழகத்திலும் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிகிறது. பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் தமிழக நிதியமைச்சர் கவனம் செலுத்தி வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக மாற்றுவதுதான் தி.மு.க அரசின் லட்சியம் என்று ஏற்கனவே பலமுறை நிதியமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால், அத்தகைய நிலையை எட்டுவதற்கான சாதகமான பொருளாதாரச் சூழல் தற்போது இல்லை என்பதையும் தமிழக அரசு உணர்ந்திருக்கிறது.
நேற்று ஐசிஏஐ அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பா.ஜ.க அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் தற்போதைய வடிவம் மிகவும் சிக்கலாக இருக்கிறது. இந்தியாவில் மிகப்பெரிய வரிவசூல் வருவாயை தருவது, ஜி.எஸ்.டி வரிவிதிப்புதான். அதை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தவேண்டியது அரசின் கடமையாகிறது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் வெளிப்படையான அணுகுமுறை தேவை என்று பேசியிருக்கிறார்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி கூடிய விரைவில் ஒரு வரைவை தயார் செய்து சமர்ப்பிக்க உள்ளேன். இதை அமல்படுத்துவதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை. வேறெந்த சட்ட மசோதாவையும் புதிதாக கொண்டு வரத் தேவையில்லை. ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்துவதில் சிறு சிறு மாற்றங்களை சரியாக செய்தாலே போதுமானது என்றும் பேசியிருக்கிறார்.