நிறம் மாறிக் காட்சி தரும் கடற்கரை!
குமரி மாவட்டம், மேற்கு கடற்கரைப் பகுதிகளான மணவாளக்குறிச்சி, சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடு, புதூர் மற்றும் கொட்டில்பாடு வரை உள்ள கடல் பகுதியின் கடற்கரை பகுதிகள் கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக நிறம் மாறிக் காட்சி தருகின்றன. அதாவது, கடற்கரையை ஒட்டி அலை அடிக்கும் பகுதிகள் செம்மண் நிறமாகக் காட்சி தருகிறது. பெரிய மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்து சேறும் சகதிகளும் கடலில் கலந்தால் எப்படி இருக்குமோ அதைவிட அதிகமான நிற மாற்றத்துடன் இப்பகுதிகளில் கடலின் தன்மை மாறுபட்டுக் காணப்படுகிறது.
மேலும், கடல் நீர் மணலுடன் கலந்த பின்னர் அந்தப் பகுதியில் நிறமாற்றம் குறைந்து காணப்படுகிறது. பின்னர் மீண்டும் அந்தப் பகுதியில் நிற மாற்றமும் தொடர்ந்து ஏற்படுகிறது. இந்த நிறமாற்றம் கடற்கரையோர மக்களையும் கடற்கரையை ஒட்டியுள்ள கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் பெரும் கவலை கொள்ளச் செய்துள்ளது. இந்தக் கடற்கரை நிற மாற்றத்துக்கான காரணம் குறித்து புதூரைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், “தற்போது குமரி மாவட்டத்தில் பெரிதாக மழை இல்லை. அதனால் ஆறுகளில் வெள்ளம் ஏதும் கிடையாது. அப்படியிருக்கையில் இந்தக் கடல் நீர் மற்றும் கடற்கரை நிற மாற்றத்துக்குக் காரணம் தொழிற்சாலை கழிவுகள் கடலில் வந்து கலப்பதால்தான். கடல் மாசுபட்டு விட்டால் ஒட்டுமொத்த நிலப்பகுதிகளும் சுற்றுச் சூழலும் கெட்டுப் போய்விடும்” என்று கூறினார்.
இப்படிக் கடல் நீர் மாசுபடுவதால் அப்பகுதியை ஒட்டி வாழும் மக்களின் வாழ்வாதாரம் கெடுவதுடன் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அதனால் இதுபோன்ற ஆபத்தான தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மீனவ மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.