வருமான வரி கட்டுவதில் தமிழகத்திற்கு நான்காவது இடம் என்கிறார், முதன்மை ஆணையர்! வருமான வரி சோதனையிலும் முதலிடமா?

வருமான வரி கட்டுவதில் தமிழகத்திற்கு நான்காவது இடம் என்கிறார், முதன்மை ஆணையர்! வருமான வரி சோதனையிலும் முதலிடமா?

திருவண்ணாமலையில் நடைபெற்ற வருமான வரித்துறை அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், வருமான வரி குறித்தும், சோதனைகள் குறித்து பேசியிருக்கிறார். மத்திய அரசின் முக்கியமான அமைச்சகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் விரிவாக பேசுவதில்லை. சமீபகாலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் திருவண்ணாமலை மண்டலத்தில் அதிக வருமான வரி வருவதற்கு வாய்ப்புள்ள இடம் என்று குறிப்பிட்ட முதன்மை ஆணையர், தமிழ்நாட்டில் 25 லட்சம் பேர் வருமான வரி செலுத்துவதாகவும், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 7 கோடி பேர் வரி செலுத்துவதாக குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எட்டு கோடியை தாண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியர்களின் மக்கள் தொகை 140 கோடியை கடக்க இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வருமான வரி வசூலில் இந்தியா அளவில் தமிழ்நாடு 4-வது இடத்தில் உள்ளது. பண பரிவர்த்தனைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பான் கார்டு டிராக்கிங் மூலமாகவும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் தனிநபர்களின் கையிருப்பு, முதலீடு, சொத்துகள், வெளிநாடு பயணம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறோம்.

தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் ரூ.82 ஆயிரம் கோடி வருமான வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது ரூ.1 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை வருமான வரியாக ரூ.88 ஆயிரம் கோடியை கடந்திருக்கிறோம். இன்னும் ரூ.20 ஆயிரம் கோடி வசூலிக்க வேண்டும். இலக்கை எளிதாக எட்டிவிடுவோம்.

வருமான வரித்துறை சோதனை நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு என்று வரும் செய்திகளை மறுத்தவர், வருமான வரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது என்றார். வருமான வரி துறை மேற்கொண்டு வரும் சோதனைகள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதித்யா ராம், அம்பாலால் உள்ளிட்ட 4 ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் நான்கு நாட்களாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. சோதனையில் கணக்கில் வராத 7½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வழக்கமான சோதனைதான் என்கிறது, வருமான வரித்துறை. முன்னாள் அமைச்சர்கள் உள்பட பல இடங்களில் அவ்வப்போது வருமான வரி சோதனைகளும் நடந்து வருவதால் அதிலும் தமிழகத்திற்கு நான்காவது இடம்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com