பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் தற்கொலை!

பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் தற்கொலை!

சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்த கிரேட் 1 காவலரான 38 வயது வள்ளிநாயகம் என்பவர் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நீக்கத்துக்கான காரணம் அவர் ஓட்டிச் சென்ற காவல் ரோந்து வாகனத்தை கம்பத்தில் இடிக்கச் செய்து வாகனம் சேதமுற்றதால் உயரதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்தார்கள் எனத் தகவல்.

வள்ளிநாயகம் கடந்த நான்கு ஆண்டுகளாக திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் ரோந்து வாகன ஓடுநராகப் பணியாற்றி வந்தார் .

இந்நிலையில் கடந்த வாரம் திருமுல்லை வாயல் பகுதியில் அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தின் பின் சக்கரம் வெடித்ததில் , கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கம்பத்தில் மோதியது . இதனால் ரோந்து வாகனம் சேதமுற்றது. வாகனம் சேதமடைந்ததை அறிந்த உயரதிகாரிகள் உடனடியாக வள்ளிநாயகத்தை அழைத்து விசாரித்து அவரை, கட்டுப்பாடற்ற வேகத்தில் வாகனத்தை இயக்கிய குற்றத்துக்காக கண்டித்தார்கள். அத்துடன் , வள்ளிநாயகம் எவ்வளவு எடுத்து கூறியும், அதைப் பொருட்படுத்தாமல் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்கள்.

வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு குறித்து அவர் தனது மூத்த அதிகாரிகளிடம் விளக்கம் அளித்த போதிலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் தன்னை பணியிடை நீக்கம் செய்ததில் காவலர் வள்ளிநாயகம் மிகுந்த மன உளைச்சல் அடைந்தார். அது குறித்து தான் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு மற்றும் சஞ்சலத்தை தற்கொலைக் குறிப்பாக தனக்கு நெருங்கிய காவல்துறை நண்பர்கள் சிலருக்கு வள்ளிநாயகம் அனுப்பி வைத்ததாகத் தகவல்.

வியாழக்கிழமை காலையில், வள்ளிநாயகம் குடும்பத்தினர், அவரது அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டனர். பணியிடை நீக்க உத்தரவு ஒரு இளம் காவலரின் உயிரைப் பறித்ததில் அவர்கள் மிகவும் துடித்துப் போனதாகத் தகவல்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றுள்ளதாலும், மரணம் தற்கொலை என்பதாலும் இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com