யானைக்குட்டியை பிரிய முடியாமல் கதறி அழுத வனத்துறை அதிகாரி! வைரல் வீடியோ!

யானைக்குட்டியை பிரிய முடியாமல் கதறி அழுத வனத்துறை அதிகாரி! வைரல் வீடியோ!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. சில நேரங்களில் இங்குள்ள வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களிலும், விளைநிலங்களிலும் யானைகள் நுழைவதுண்டு. இவ்வாறு கடந்த 11-ம் தேதி 4 மாத ஆண் யானைக் குட்டி ஒன்று பென்னாகரம் அருகே நீர்க்குந்தி பகுதியில் வனத்தில் இருந்து வெளியே வந்தது. தாயைத் தவறவிட்ட இந்த யானைக் குட்டி அந்தப் பகுதியில் இருந்த விளைநிலத்தில் நுழைந்தபோது தவறுதலாக அங்கிருந்த விவசாய கிணறு ஒன்றில் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று தீயணைப்புத் துறை உதவியுடன் குட்டி யானையை கயிறு கட்டி மீட்டனர்.

இந்த யானைக் குட்டியின் தாய் யானையை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலவியதால் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள ஒட்டர்பட்டி பகுதியில் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தது. வனத்துறைக்கான கால்நடை மருத்துவர்கள் இந்தக் குட்டிக்கு சிகிச்சை அளித்த பின்னர் வன ஊழியர் மகேந்திரன் யானைக் குட்டியை பராமரித்து வந்தார்.

இந்நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் படி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக முதுமலைக்கு இந்த யானைக் குட்டி வனத்துறைக்கான பிரத்தியேக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.

இனி இந்த யானைக் குட்டி, சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ எனும் குறும்படத்தில் இடம்பெற்ற, முதுமலையைச் சேர்ந்த யானைப்பாகன் பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோரின் பராமரிப்பில் முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் வளர உள்ளது. இதற்கிடையில், மாரண்ட அள்ளி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் 2 குட்டிகளை வனத்தில் யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் பணிக்காக மாரண்டஅள்ளி பகுதியில் முகாமிட்டிருந்த யானைப்பாகன் பொம்மன் தற்போது இந்த யானைக் குட்டியுடன் முதுமலை நோக்கி பயணிக்கிறார் என்று தகவல்.

இதற்கிடையில் கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட யானைக் குட்டியை ஒரு வார காலம் பராமரித்த வன ஊழியர் மகேந்திரன், அந்த குட்டியை இன்று முதுமலைக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுத காட்சியைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

யானைகள் புத்திசாலி விலங்குகள் மட்டுமல்ல, பாசம் வைத்தவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத அளவுக்கு நட்புணர்வையும் காட்டக் கூடியவை என்பது படத்தின் மூலமாக மட்டுமல்ல வன ஊழியர் மகேந்திரனின் பிரிவாற்றா அழுகை மூலமாகவும் புலனாகியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com