எம்ஜிஆர் மாற்றிஅமைத்த சட்டம் - ஓபிஎஸ்ஸை மீண்டும் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும்.

எம்ஜிஆர் மாற்றிஅமைத்த சட்டம் - ஓபிஎஸ்ஸை மீண்டும் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என ஓ.பன்னீர் செல்வமும், இடைக்கால பொதுச் செயலாளர் நான்தான், 90 சதவிதிதம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எனக்குதான் உள்ளது என எடப்பாடி பழனிசாமியும் கூறி வரும் நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் யார் வெற்றி பெறப் போகிறார்கள், டெல்லியிலிருந்து வரும் அழுத்தமும் ஆதரவும் யாருக்கு சாதகமாக முடியப் போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அதிமுகவினரைத்தாண்டி பொது மக்களிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

 தமிழ்நாடு வரலாற்றில், இரு திராவிட கட்சிகளுக்கும் தவிர்க்க முடியாத இடம் உண்டு. அதில் அதிமுக அதிக முறை தமிழ்நாட்டை ஆண்டுள்ளது. அந்த வகையில் அக்கட்சியின் தலைமை யார் கைக்கு போகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாவது இயல்புதான். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பினரின் ஆதரவாளர்களிடமும் இது குறித்து பேசினோம்.

 முதலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசிய போது,

“எங்கள் தரப்பு வாதத்தை மிகத் தெளிவாக உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளோம். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் எல்லாம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நீக்கி விட்டோம். அப்பதவி அன்றோடு முடிவடைந்துவிட்டது.

“அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் தெரியும். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா? பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு . அப்படி இருக்கும்போது ஓபிஎஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்று ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது?” என்கிறார்கள்.

 தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை குறிப்பிட்டு தானே கடிதம் அனுப்பியுள்ளது என்றோம். அதற்கு அவர்கள், ‘டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்று தான் அதிகாரபூர்வ இணையதளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். மாநில தேர்தல் ஆணையம் தான் கடிதம் அனுப்பியது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை’ என்கிறார்கள்.

அடுத்து ஓபிஎஸ் தரப்புஆதரவாளர்கள் சிலரிடம் இவ்வழக்கு சம்பந்தமாகப் பேசினோம்.

 அவர்கள், எங்கள் தரப்பு வாதத்தை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளோம்.

திமுகவிலிருந்து எம்ஜிஆரை வெளியேற்றியது பொதுக்குழு மூலமாகத்தான். அதனாலேயே அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கும்போது, அடிப்படை உறுப்பினர்களுக்கும் அதிகாரம் அளித்து சட்ட விதிகளை மாற்றி அமைத்தார். “எம்ஜிஆர் அமைத்த சட்டம் ஓபிஎஸ்ஸை மீண்டும் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும். விரைவில் மீண்டும் இரட்டை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி இறங்கி வருவார் பாருங்கள்“ என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

அடுத்து,அதிமுக கட்சி சார்பாகவும், தலைமை நிலையச் செயலாளர் சார்பாகவும் அடுத்த கட்டமாக உச்சநீதி மன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட உள்ளன.

விரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது. அதன் பின்னர் அதிமுக கட்சி ஓபிஎஸ்ஸுக்கா, ஈபிஎஸ்ஸுக்கா என்பது உறுதியாகிவிடும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com