நாய்க்குட்டிக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட சோகம்!

நாய்க்குட்டிக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட சோகம்!

னிதர்களுக்கு மனிதர் உதவ மனமில்லாத இந்தக் காலத்தில் நாய் போன்ற செல்லப் பிராணிகளை பலரும் கார்களிலும் இரண்டு சக்கர வாகனங்களிலும் வைத்து கொஞ்சிக் கொண்டு செல்வதை நாம் தினசரி பார்க்கலாம். அதுவும் அந்த பிராணிகள் காரிலிருந்து தலையை வெளியே நீட்டிக்கொண்டு நடந்து செல்வோரை வெறுப்பேற்றுவது போல் பார்த்துக்கொண்டு செல்வது பலரையும் நிச்சயம் கடுப்பேற்றும். சிலர் தங்கள் குழந்தைகளைப் போலவே அந்தச் செல்லப் பிராணிகளிடமும் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்து வளர்த்து வருவதைக் காணலாம்.

இப்படித்தான் சென்னை, காவாங்கரை பகுதியைச் சேர்ந்த 28 வயதான தீபன் என்கிற ஆட்டோ ஓட்டுநர் ஒரு நாய்க்குட்டிக்கு ஆசைப்பட்டு தனது உயிரையே விட்ட சம்பவம் மனதைப் பதறச் செய்வதாக உள்ளது. இறந்துபோன தீபனுக்கு 24 வயதான பவானி என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர் கடந்த சனிக்கிழமையன்று இரவு ஒரகடம் அருகே உள்ள தனது சொந்தக்காரர் வீட்டுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் சென்றிருந்தார். அங்கே நாய்க்குட்டி ஒன்றை பார்த்த இவர், அந்த நாய்க்குட்டியை தம்மோடு வீட்டுக்கு கொண்டு சென்றால் தனது இரு பெண் குழந்தைகளும் மகிழ்வார்கள் என்று நினைத்து அந்த நாய்க்குட்டியை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பி இருக்கிறார்.

வழியில் கள்ளிக்குப்பம் அருகே இவர் வந்துக் கொண்டிருந்த சமயம், அந்த நாய்க்குட்டி கீழே துள்ளிக் குதித்து விழுந்துள்ளது. இதனால் மனம் பதறிய தீபன் வண்டியை நிறுத்தாமலேயே கீழே விழுந்த நாய்க்குட்டியை தூக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த இரு சக்கர வாகனம் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் போடப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதில் பலத்த காயமடைந்த தீபனை அருகில் இருந்தவர்கள் பார்த்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.  

மருத்துவமனையில் பலத்த காயத்தோடு அனுமதிக்கப்பட்ட தீபனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறி உள்ளனர். ஒரு நாய்க் குட்டிக்கு ஆசைப்பட்டு உயிரையே விட்ட தீபனின் மரணம், அவரது மனைவி, குழந்தைகள் மட்டுமின்றி அவரது குடும்பத்தையே பெரும் அதிர்ச்சியும் கவலையும் கொள்ளச் செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com