சிக்கன் குழம்பு கொடுத்து கொள்ளையடித்த பலே திருட்டுச் சம்பவம்!

சிக்கன் குழம்பு கொடுத்து கொள்ளையடித்த பலே திருட்டுச் சம்பவம்!

கோவை , ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 60 வயதான இவர் ஒரு கோடீஸ்வரப் பெண்மணி என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரிடம் வர்ஷிணி என்றொரு இளம்பெண் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருக்கிறார். அந்தப் பெண் தானும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் சில விவரங்கள் அறிந்து கொள்வதற்காக ராஜேஸ்வரியைப் பார்க்க வந்திருப்பதாகவும் கூறி அவரிடம் அறிமுகமாகி இருக்கிறார். நாளடைவில் வர்ஷிணி, ராஜேஸ்வரியின் வளர்ப்பு மகள் ஆகாத குறை. அப்படி வெகு சாமர்த்தியமாகப் பேசிப் பேசியே ராஜேஸ்வரியை வசியப்படுத்தி இருக்கிறார் வர்ஷிணி. இப்படித்தான் மகள் போல எண்ணி வர்ஷினியுடன் இணைந்து சமீப காலமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் ராஜேஸ்வரி.

தன் ஏமாற்று வேலையின் அடுத்த கட்டமாக அண்மையில் தனக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் என்று கூறி அருண்குமார், சுரேந்தர், பிரவீன் எனும் மூன்று நபர்களை ராஜேஸ்வரிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் வர்ஷிணி. அவர்களுடன் கடந்து மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரியைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார் வர்ஷினி, அப்போது ராஜேஸ்வரிக்குப் பிடிக்கும் என்று சிக்கன் குழம்பு சமைத்து எடுத்துச் சென்று ராஜேஸ்வரியிடம் கொடுத்திருக்கிறார்.

மகள் போன்ற ப்ரியம் வைத்திருக்கிறார். நன்கு அறிமுகமான பெண் வேறு என்று கருதிய ராஜேஸ்வரி, வர்ஷிணி கொண்டு வந்த சிக்கன் குழம்பை சாப்பிட்டிருக்கிறார். அவ்வளவு தான் பிறகு அவர் எப்படி மயங்கினார் என்று அவருக்கே தெளிவாக ஞாபகமில்லை. விடிந்து எழுந்து பார்த்தால் வீட்டில் வர்ஷினியும், அந்த மூன்று புதியவர்களையும் காணோம், அவர்களோடு சேர்த்து வீட்டு பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளும், 2 கோடி ரூபாய்களும் கூட அபேஸ் ஆகியிருந்தன. இதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, தன் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு குறித்து கடந்த சில தினங்களாக தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர் கோவை போலீஸார். தற்போது விசாரணையின் அடுத்த கட்ட முன்னேற்றமாக சென்னை, திருவள்ளூர் பகுதியில் பதுங்கி இருந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அருண்குமார், பிரவீன், சுரேந்தர் உள்ளிட்டோர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். அவர்களிடம் இருந்து ரூ 33 லட்சம் பணம் மற்றும் 31 சவரன் நகைகள் மீட்க்கப்பட்டன. இவர்கள் பிடிபட்ட போதும் இந்த பலே கொள்ளைச் சம்பவத்தின் மூளையான காஸ்ட்லி திருடி வர்ஷினியும் அவரது கூட்டாளியான நவீன் குமாரையும் போலீஸ் இன்னமும் கண்டறிந்த பாடில்லை.

அவர்களுக்கான தேடுதல் வேட்டையை போலீஸார் மேலும் வலுப்படுத்தி உள்ளனர். சீக்கிரத்தில் வர்ஷிணியைப் பிடித்து விடுவோம் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில் வர்ஷிணி, ராஜேஸ்வரிக்கு பகல் வேஷக்காரியாக பாசத்துடன் அளித்த சிக்கன் குழம்பை ஆய்வு செய்து பார்த்ததில் அதில் தூக்க மாத்திரைகள் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com