திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழா! அன்னதானம் செய்ய விரும்புவோர் 26 க்குள் விண்ணப்பிக்கலாம்!

Thiruvannamalai
Thiruvannamalai

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் சன்னதி விழாக்கோலம் பூண்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.

அண்ணாமலையார் சன்னதியில், 64 அடி உயர கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 தினங்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

டிசம்பர் 6ம் தேதி அதிகாலை திருக்கோயிலின் சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப அலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். தீபத்திருவிழா பணிகள், கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்ததுடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மாடவீதியில் சாமி வீதியுலா நடைபெற உள்ளதால் சாமி வீதி உலா நடைபெற உள்ள வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்ணாமலையார் மற்றும் அம்பாள் திருவிழா தினமான 10 தினங்களும் காலை மாலை என இரு வேலைகளிலும் இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷாமிருகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

தீபத் திருவிழா உற்சவமான நவம்பர் 27ம் தேதி காலை முதல் டிசம்பர் 6ம் தேதி இரவு வரை சாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் 1000 கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது பல்வேறு வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 7ம் நாள் திருவிழா அன்று மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கோயிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் அன்னதானம் விநியோகம் செய்ய விரும்புவோர் இன்று முதல் நவம்பர் 26 ஆம் தேதிக்குள்ளாக foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 26 ஆம் தேதிக்கு பிறகு அன்னதானம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். நேரில் விண்ணப்பிக்க நியமன அலுவலர் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை செங்கம் ரோடு, திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் மகா தீபத்தன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 22 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com