திருந்தாத குடிமகன்கள் – தம்மம்பட்டியில் பரபரப்பு.

திருந்தாத குடிமகன்கள் – தம்மம்பட்டியில் பரபரப்பு.

நாட்டின் முக்கிய தினங்களில் மது அருந்துவதைத் தடுக்கும்  விதத்தில் நாடெங்கும் மதுவுக்கு  தடை விதித்துள்ளது அரசு. ஆனால் குடித்துப் பழகிய போதை ஆசாமிகளுக்கு ஒரு நாள் தடையும் பெரும் சோகம்தான் . இவர்களின் சோகத்தைத் தணிக்கும் வகையில் மதுவைப் பதுக்கி வைத்து விற்கும் முறைகேடுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் காவலரின் கண்களில் இருந்து தப்பித்தாலும் மாட்டிக் கொள்வதும் உண்டு. எப்படி? இதோ இப்படி!.

      சேலம் மாவட்டம் தம்மம்பட்டி இரண்டாவது வார்டு காந்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உதவி கலெக்டர் சரண்யாவுக்கு ரகசிய தகவல் வந்ததால்  உடனே அவர் தாசில்தார் வெங்கடேசனை தொடர்பு கொண்டு மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டில் சோதனை நடத்துமாறு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து  தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் காவலர்கள் புடைசூழ  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினர் அங்கு பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ளதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

       விற்பனைக்குத் தயாராக  அரசு டாஸ்மாக் கடையில் அடுக்கி வைக்கப்படுவது போன்று அந்த பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த தாசில்தார் வெங்கடேசன் அவற்றை தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த பெட்டி களில் 3,840 மதுபாடல்கள் இருந்தன. இது தொடர்பாக அந்த வீட்டில் தங்கி இருந்த கலைச்செல்வன் என்பவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

      குடியரசு தின விழாவையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் நேற்று முன் தினம் இரவே  பெட்டி பெட்டியாக தம்மம் பட்டியைச் சேர்ந்த காந்தி நகர் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இந்த  வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்படுள்ளது. விடுமுறை நாளில் சந்துக்கடையாக அங்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ய ஏற்பாடு நடந்துள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து  இவ்வளவு மது பாட்டில்களை அவர்களுக்கு விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் டாஸ்மாக்  ஊழியர்களே சந்து கடையில் மது விற்பனை செய்ய இதுபோன்ற மோசடி நடவடிக்கையில் இறங்கினார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. டிரைவர் பணியில் இருக்கும் கலைச் செல்வனை காவலாக தங்க வைத்திருந்ததாகவும் தெரிகிறது. அவர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் மது பாட்டில்கள் பதுக்கிய விவகாரத்தில் மேலும் பலரை காவல்துறை தேடி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்ப   ஏற்படுத்திவிட்டது  என்றுதான் தணியுமோ இந்த டாஸ்மாக் மோகம்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com