டிக்கெட் புக்கிங் முடங்கியது; கூட்ட நெரிசலில் ஸ்தம்பித்த தாம்பரம் ரயில் நிலையம்!
சென்ற வாரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பானது. பின்னர் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக ரயிலில் செல்வதற்காக காத்திருந்தது தெரிய வந்தது. நடைமேடைகளில் உட்கார இடம் இல்லாமல் பயணிகள் தவித்ததும் ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் வார இறுதியான நேற்று கட்டுங்கடாத கூட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். காலை முதலே தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் தொடர்ந்து இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தால் தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை செல்லும் ரயில்கள் கூட நிரம்பி வழிந்தன.
செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் நடைமேடைகளில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக மேல்மருவத்தூர் வரை செல்ல வேண்டிய சிறப்பு ரயிலை விக்ரவாண்டி வரை நீட்டிப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. வார இறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு ரயிலை நிரந்தரமாகவே விழுப்புரம் வரை நீட்டிக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதிக கூட்டம் இருந்ததாலும் டிக்கெட் கவுண்டரில் கம்ப்யூட்டர் சரிவர செயல்படாத காரணத்தால் நீண்ட வரிசைகளில் பயணிகள் காத்திருப்பது காலை முதல் இரவு வரை நீண்டது. வட மாநிலத்தவர்களும், வயதானவர்களும், பெண்களும், குழந்தைகளும் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்தது.
தானியங்கி டிக்கெட் எந்திரங்களும் செயல்படவில்லை. இது பற்றி ரயில்வே ஊழியர்களிடம் புகார் எழுப்பியபோது, யூ.டி.எஸ் ஆப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால், யூ.டி.எஸ் ஆப் நிறைய பேருக்கு செயல்படவில்லை. யூ.டி.எஸ் லாகின் கூட செய்ய முடியாத நிலை இருந்தது.
ஜிபே, பேஎடிம் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்ட நிலையில் ஏன் ரயில்வே நிர்வாகம் அவற்றையெல்லாம் பயன்படுத்துவதில்லை என்று பயணிகள் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள் நேற்று அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதனை நடத்தினார்கள்.
அனைவருக்கும் குறித்த நேரத்திற்குள் டிக்கெட் விநியோகத்தை உறுதி செய்ய முடியாத ரயில்வே நிர்வாகம், டிக்கெட் பரிசோதனையை மட்டுமே தீவிரப்படுத்துவதில் என்ன பலன் என்று பயணிகள் கேள்வி எழுப்பினார்கள்.