டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள்: குரூப் 2 மட்டுமல்ல குரூப் 4 தேர்வுகளிலும் தொடரும் குழப்பம்!

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள்: குரூப் 2 மட்டுமல்ல குரூப் 4 தேர்வுகளிலும் தொடரும் குழப்பம்!

கடந்த வாரம் டி.என்.பி.எஸ்.சி அறிவித்த குரூப்-4 தேர்வு முடிவுகளும் சர்ச்சையாகியிருக்கின்றன. இதுவரை தேர்வு முடிவுகள் கிடைக்கப்பெறாதவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டபோது, 5 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் கட்டாயத் தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

சென்ற மாதம் நடைபெற்ற குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளில் நடந்த குளறுபடிகள் பெரிய அளவில் சர்ச்சையானது. தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பாளர்களும் விடைத்தாள்கள் வருவதற்கும் தாமதமானது. விடைத்தாள்கள் வரிசை எண் மாற்றி வழங்கப்பட்டு, பதிவெண்களைக் கவனிக்க நேரமில்லாமல் விடைத்தாள்கள் மாறிப்போய் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தின.

மறு தேர்வு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை இதுவரை ஆணையம் பரிசீலிக்கவில்லை. 'கட்டாயத் தமிழ்த் தேர்வு' என்பது வெறும் ஒரு சடங்குதான் என்று மாணவர்கள் தரப்பில் புரிந்து கொள்ளப்படுகிறது. அரசுப் பணித் தேர்வுகளுக்காகத் தீவிரமாக படித்துப் பயிற்சி மேற்கொண்டவர்கள் தேர்வு முடிவுகள் நியாயமாக இருக்கப்போவதில்லை என்று நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஏகப்பட்ட கனவுகளை சுமந்து கொண்டு தேர்வுகளை அணுகிய மாணவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.

சமீப காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார்கள், கல்வியாளர்கள். நேற்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரமளவுக்கு ஏகப்பட்ட குளறுபடிகளுக்கான விளக்கத்தை அரசு தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இது குறித்து கல்வியாளரும் பேச்சாளருமான திரு. பெருமாள் மணியிடம் பேசினோம். 'இட ஒதுக்கிடு, சமூக நீதி போன்றவற்றை செயல்படுத்தக்கூடிய இடத்தில் பணியாளர் தேர்வாணையம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதில் தேட வேண்டியிருக்கிறது. ஏனோ பொது விவாதங்களில் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் பேசப்பட்டதில்லை. திராவிட இயக்கம் போல் நீண்ட நெடிய நூறாண்டு கால வரலாறு கொண்டது பணியாளர் தேர்வாணையம் என்பதை கவனிக்க வேண்டும்.

வினாத்தாள், தேர்வு மையம் குளறுபடிகளால் பல இடங்களில் தேர்வுகள் தாமதமான நிகழ்வுகள் உளவியல் ரீதியாக மாணவர்களை பாதித்திருக்கும். 55 ஆயிரம் பேர் பங்கேற்ற ஒரு போட்டித் தேர்வை ரத்து செய்துவிட்டு, பணியாளர் தேர்வாணையத்தால் நிச்சயமாக மறு தேர்வு நடத்தியிருக்க முடியும்.

கைக்கெட்டும் தூரத்தில் வேலை என்னும் நிலையில், பிரதான தேர்வை எழுத வந்திருக்கும் மாணவர்களுக்கு அரை மணி நேர தாமதம் கூட மனதளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதுவொரு சென்ஸிடிவ்வான பிரச்னை. கவனமாக அணுகியிருக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு அன்றைய தினமே விடைத்தாள் வெளியாகிவிடுகிறது. மாணவர்களும் தாங்கள் எழுதியது சரியா, தவறா என்பதை அன்றே சரிபார்த்துக்கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மாதக்கணக்கில் காத்திருந்தாலும் கூட வெளியாவதில்லை. வடமாநில தேர்வாணையங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நம்முடைய டி.என்.பி.எஸ்.சியின் செயல்பாடுகளில் ஏனோ வெளிப்படைத்தன்மை இல்லை’என்றார், வருத்தத்துடன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com