தொடரும் டி.என்.பி.எஸ்.சி குளறுபடிகள் - தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்!

தொடரும் டி.என்.பி.எஸ்.சி குளறுபடிகள் - தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்திகளில் அடிபடாத நாட்களே இல்லை எனலாம். கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுகள், வினாத்தாள், அதில் ஏற்பட்ட தாமதம் தவிர ஒரே பயிற்சி மையத்தில் படித்த ஏராளமானோர் தேர்வானது உள்ளிட்ட பல்வேறு செய்திகள் வெளியாகி சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. இதன் காரணமாக அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது கூடவே மின்சார வாரியம் உட்ப பல துறைகளைச் சேர்ந்த காலியிடங்களை நிரப்ப வேண்டிய பணி, டி.என்.பி.எஸ்.சி துறைக்கு கூடுதலாக தரப்பபட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி நடத்தப்படும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்புகின்றன. நேற்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

நேற்று காஞ்சீபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. காலையில் நடைபெற்ற தேர்வு முடிந்த பிறகு மதியம் 2 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வுக்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள்ளே செல்ல வேண்டும் என்னும் விதியின் அடிப்படையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மையத்தின் கதவுகள் மூடப்பட்டன. இதனால் தாமதமாக வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை உள்ளே விட அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

பாதுகாப்பில் இருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள், சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென தேர்வர்கள் நுழைவுவாயில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து தேர்வெழுத தொடங்கினர். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தார்கள். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீப காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது என்று போட்டித் தேர்வுகளுக்கு

தயராகும் மாணவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து கடந்த சட்டமன்றத் தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரமளவுக்கு நிலைமை இருந்தது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தொடரும் குளறுபடிகள் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பியபோது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். குளறுபடிகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை விளக்கம் பெறப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி இயக்குநர் பதவி நீண்டகாலமாகவே காலியாக இருக்கிறது. அதை நிரப்புவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்கிறார்கள், கல்வியாளர்கள். அரசு வேலை விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைத்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com