டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: யூடியூபில் நாளை முதல் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் யூடியூபில் நாளை முதல் வெளியிடப் படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியானது அரசுப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறது. இதற்காக அதிகாரபூர்வமாக  AIM TN என்கிற யூடியூ சேனல் உருவாக்கப் பட்டு, அதில் பயிற்சி வகுப்புக்கான காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது.

அந்த வகையில் வருகிற பிப்ரவரி 25 -ம் தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான பயிற்சிக் காணொலிகளை நாளை முதல் வெளியிடத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இதில், போட்டித் தேர்வுகளில் அனுபவம் பெற்ற பயிற்றுநர்கள் பாடங்களை நடத்தியுள்ளார்கள். தமிழ்வழிக் கல்வி பயின்றோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பாடங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து போதிக்கப் படுகின்றன.

நாளை முதல் 60 நாட்களுக்கு தொடர்ச்சியாக இந்த பயிற்சி நடத்தப்படும். அதன் பின்னர் ஆன்லைனில் 18 தொடர் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

அந்த மாதிரித் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும். அதையடுத்து மாணவர்கள் எழுதி அனுப்பும் விடைத்தாள்கள் வல்லுநர்களால் திருத்தப்பட்டு மாணவர்கள் தங்கள் விடைகளைச் சுய மதிப்பீடு செய்துகொள்ளும் வகையில் திருப்பி அனுப்பப்படும்.

இந்த பயிற்சியின் முதல் காணொலி AIM TN யூடியூப் சேனலில் நாளை முதல் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com