கெமிக்கல் கிடங்கில் இருந்து நச்சுப் புகை; மூச்சுத் திணறும் மக்கள்!

கெமிக்கல் கிடங்கில் இருந்து நச்சுப் புகை; மூச்சுத் திணறும் மக்கள்!

சென்னையின் புறநகர் பகுதியான செங்குன்றம் அருகில் பாயசம்பாக்கத்தில் இருக்கிறது தனியாருக்கு சொந்தமான ஒரு ரசாயனக் கிடங்கு. இந்த ரசாயனக் கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகளும், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட ஏராளமான ரசாயன பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்தக் கிடங்கில் கடந்த மாதம் 24ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி இந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருட்கள் தீயில் கருகி கரும்புகை அப்பகுதியைச் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தீவிர சுவாசக் கோளாறுக்கு ஆளானார்கள்.

இந்த தீ விபத்துக்கான காரணத்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து ஏற்பட்டு சுமார் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், இன்று காலை முதல் அந்த ரசாயனக் கிடங்கில் இருந்து மீண்டும் வெள்ளை நிறத்தில் ரசாயனப் புகை வேகமாக வெளியாகிக் கொண்டு இருக்கிறது. ஏற்கெனவே இந்த கிடங்கில் இருந்து வெளியான கரும்புகையால் சுவாசக் கோளாறால் பெரும் அவதியுற்ற மக்கள், தற்போது வெளியாகும் இந்த வெண் புகையால் மிகவும் அச்சமடைந்து உள்ளனர்.

இந்த ரசாயனக் கிடங்கில் உண்டான புகை குறித்து தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையும், மீட்புப் பணிகளையும் செய்து வருகிறார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த ரசாயனக் கழிவுகளை குழி தோண்டிப் புதைக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றதுதான் இந்தப் புகை வெளியேற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே தீயில் கருகிய ரசாயனக் கழிவுகள் குவிக்கப்பட்டு கிடந்த நிலையில், தற்போது அந்தப் பகுதியில் மழை பெய்ததால் கழிவுகளில் இருந்து ரசாயனப் புகை வெளியேறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இந்த ரசாயனக் கழிவுகளின் மீது மண்ணைக் கொட்டி மூடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ரசாயனக் கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையின் காரணமாக மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், தோல் அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால், அப்பகுதி சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com