பள்ளி வாகனங்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி எச்சரிக்கை!

பள்ளி வாகனங்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி எச்சரிக்கை!

கோடை விடுமுறை முடிந்தவுடன் பிள்ளைகள் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயாராகி விடுவார்கள். பிள்ளைகளை வரவேற்க பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கும். தற்காலத்தில் பெரும்பாலான  பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அந்தந்த பள்ளி நிர்வாகமே அவர்களிடம் உள்ள பேருந்தில் அழைத்துச் சென்று மீண்டும் அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. இதற்கான கட்டணத்தையும் பள்ளிக் கட்டணத்துடன் சேர்த்து விடுகின்றனர். கணவன் மனைவி என இருவரும் வேலைக்குப் போவதால் அவர்களுக்கு பிள்ளைகளை கொண்டு விடும் கவலையைத் தீர்த்து வைக்கிறது இந்த பயண வசதி.

      இந்தப் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும் மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் ஏதாவது குறைபாடு இருப்பதை கண்டறிந்தால் உடனே அதனை சீர் செய்த பிறகு இயக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியும் வருகின்றனர். எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் எதிர்பாராமல் பல நேரங்களில் பள்ளி வாகனங்களில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அவற்றைத் தடுப்பது குறித்து அரசும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த உத்திரவும்.
      அடுத்த மாதம் நடைபெறும் ஆய்வின் போது கேமரா சென்சார் கருவி இருந்தால்தான் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளிக்கப்படும் என்ற போக்குவரத்து அதிகாரிகளின் அதிரடி உத்தரவு பள்ளி நிர்வாகிகள் கவனத்துக்கு வந்துள்ளது.

     தமிழகத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

     இதனிடையே தனியார் பள்ளி வாகனங்களில் முன் பின் பக்கத்தில் கேமரா பொருத்த வேண்டும், எச்சரிக்கை சென்சார் கருவி பொருத்த வேண்டும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தனியார் பள்ளி வாகனங்களில் கட்டாயம் கேமரா சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     பள்ளி விடுமுறையின் போது மே மாதத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது பள்ளி வாகனத்தின் கேமராவும் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். அவ்வாறு பொருத்தாத வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.

      இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் “மாணவர்களின் பாதுகாப்பை கருதி தனியார் பள்ளி வாகனங்களில் அவசர கதவு கேமரா உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும். தற்போது சிசிடிவி கேமரா சென்சார் கருவி கட்டாயம் பொருந்த வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வின்போது கட்டாயம் பள்ளி வாகனங்களில் கேமரா சென்சார் கருவி பொருத்த வேண்டும் இதனை பொருத்தாத வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட மாட்டாது” என்றனர்.

      எப்படியோ பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பத்திரமாக வீடு வந்து சேரும் வரை மனதில் ஒருவித பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். நம்பி பேருந்தில் அனுப்பும் பிள்ளைகள் பாதுகாப்பாக வருவார்கள் எனும் நம்பிக்கையை பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு அளிக்க வேண்டியது கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com