போக்குவரத்து விதிமீறல்: திண்டுக்கல் லியோனிக்கு அபராதம்!
மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பதற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகியிருக்கிறது. திண்டுக்கல் ஐ.லியோனி, இவர் பிரபலமான பட்டிமன்றப் பேச்சாளராக இருந்து தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவரது கார் மீது தான் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி சமீபத்தில் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரூ 2,500 அபராதமும் விதித்தனர்.
சென்னை ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வெள்ளை நிற சொகுசு காா், தமிழ்நாடு அரசு இலச்சினை (லோகோ) பொருத்திச் சென்றது. அந்தக் காரில் விதிமுறைகளை மீறி சன் ஃபிலிம் ஸ்டிக்கா் அடா்த்தியாக ஒட்டப்பட்டிருந்தது. மேலும், காரின் முன்பகுதியில் பம்பா் பொருத்தப்பட்டிருந்தது. அத்துடன் மோட்டாா் வாகனச் சட்ட விதிமுறைகளை மீறி, வாகன எண் பலகையும் பொருத்தப்பட்டிருந்தது.
இதைப் பாா்த்துச் சென்ற பொதுமக்களில் ஒருவா், அந்த காரைப் புகைப்படமெடுத்து அந்த ஆதாரத்துடன் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு ‘ட்விட்டா்’ மூலம் புகாா் அளித்தாா். அதை காவல்துறையினர் ஆய்வு செய்து, அந்த காரில் செயல்படுத்தப் பட்டிருந்த விதிமுறை மீறலை உறுதி செய்தனா்.
இதையடுத்து போக்குவரத்து சட்ட விதி மீறலில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட சொகுசு வாகனத்துக்கு அனுமதிக்கப்பட்ட அளவைத்தாண்டி சன் ஃபிலிம் ஒட்டியதற்காக ரூ.500, வாகன எண் பலகை முறையாக இல்லாததற்கு ரூ.1,500, பம்பா் பொருத்தப்பட்டதற்கு ரூ.500 என மொத்தம் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையினர், அதற்கான சலான் நகலை, தங்களது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டனா்.
அதே சமயம், லியோனி தமிழ்நாடு அரசின் லோகோ பொருத்திச் சென்றதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அந்த காா் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு சொந்தமானது எனவும், அவா் தற்போது அரசுபதவியில் இருப்பதால் தமிழக அரசின் இலச்சினையைத் தனது சொந்த காரில் பொருத்தி இருந்ததாகவும் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.