ஆரம்பமானது, டிரான்ஸ்பர் படலம் - தமிழக அரசு அதிரடி!

ஆரம்பமானது, டிரான்ஸ்பர் படலம் - தமிழக அரசு அதிரடி!

மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.முக ஆட்சியில் நிறைய மாற்றங்கள் வரும் என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே இருந்து வருகிறது. நேற்று நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களில் இருந்து அமைச்சரவை முதல் அதிகாரிகள் வரை ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஆண்டை நிறைவு செய்ய இருக்கிறது. ஞாயிறு அன்று புதிய ஞாயிறு உதிக்கும் என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது, கோட்டை வட்டாரங்கள். அமைச்சரவை மாற்றம்தான் இன்றைய கூட்டத்தின் ஹைலைட் என்கிறார்கள். 2 மூத்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படும் என்றும், புதிதாக சிலர் அமைச்சராவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் வட்டாரத்தில் பணிமாற்றம் செய்து உத்தரவுகள் நேற்று வெளியாகியிருக்கின்றன. காவல்துறையை பொறுத்தவரை 4 ஏ.டி.ஜி.பி. க்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி.யாக இருந்த அபய்குமார் சிங், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை தலைமைச் செயலகத்தில் ஏ.டி.ஜி.பி.யாக இருந்த வெங்கட்ராமன், சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை காவல் நிர்வாகப் பிரிவின் காவல்துறை தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.‘ ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஜெயராம், சென்னை காவல்துறை செயல்பாட்டு பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையை அடுத்து பள்ளிக் கல்வித்துறையிலும் மாற்றங்கள் ஆரம்பித்துள்ளன. தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் முதன்மைக்கல்வி அதிகாரிகள் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் பணியாற்றும் அதிகாரிகளில் பலர் மாற்றப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 20 பேருக்கு பணி மாற்றல் உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலமுரளி திருப்பூருக்கும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி மு.சிவக்குமார் திருச்சிக்கும், சென்னை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் எம்.மஞ்சுளா புதுக்கோட்டைக்கும் பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சே.மணிவண்ணன் பெரம்பலூருக்கும், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ரெ.அறிவழகன் விழுப்புரத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார். நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாற்றல் உத்தரவுகள் அடுத்து வரும் நாட்களில் வரும் என்று காவல்துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. ஆட்சியர். வருவாய்த்துறை அலுவலர் மத்தியிலும் பணி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறைவாரியாக நிறைய மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தலைமைச்செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே என்பது போல் அமைச்சரவை மாற்றத்திற்கான அறிகுறிதான் இது என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com