திருச்சியில் அமைந்துள்ள புகழ்மிக்க கோவில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள கோபுரத்தில் விரிசல் விரிவடைந்து இன்று காலை ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் காவேரி கொள்ளிடம் கரைகளுக்கு நடுவோ, ஆறுகள் சூழ்ந்த தீவுவாக காட்சியளிப்பது ஸ்ரீரங்கம், இந்த ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அரங்கநாதர் சாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும்.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாவும் கருதப்படுகிறது.
மேலும் ஸ்ரீரங்கம் கோவிலின் உடைய ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழில் உள்ள 236 எழுத்துக்களை குறிக்கும் வண்ணம் ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் 21 கோபுரங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. அதில் ஒன்று வெள்ளை நிறத்தை உடைய கோபுரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரம்பரியம், பண்பாடு, கட்டிடக்கலை என்ற கூடுதல் சிறப்பு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு உள்ளது.
இதனால் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குப் பகுதியான கீழவாசலில் அமைந்துள்ள கோபுர வாசலின் மேற்புறத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் விரிசல் 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் விரிசலை சரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே விரிசல் விரிவடைந்தது.
அதன் பிறகு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் தலைமையில் விரிசல் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இதை சரி செய்வதற்கு 67 லட்சம் செலவில் திட்டம் தீட்டப்பட்டது. அதற்கான நிதியை தனியாரிடம் இருந்தும் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும் திரட்ட முயற்சி எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஜூலை 5 நள்ளிரவு 1.30 மணி அளவில் கீழவாசலில் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் மேலும் விரிவடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்து உள்ளது. இதனால் தற்போது 98 லட்சம் ரூபாய் செலவில் கோபுரத்தை புனரமைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இன்று காலை முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த கோபுரம் மேலும் இடியாமல் தடுக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு மின்சாரம் நிறுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோபுரம் திடீரென்று இடிந்ததற்கான காரணம் குறித்து கேட்கும் பொழுது, கீழவாசல் கோபுரத்திற்கு அருகே உள்ள கீழ அடையவளஞ்சான் முனீஸ்வரர் திருக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகள் காரணமாக அதிர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்ற வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் அருகே பூக்கடை நடத்தி வரும் சண்முகம் கல்கி ஆன்லைனுக்கு கூறியதாவது, கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு 4 மாதங்களுக்கு மேலாக உள்ளது. பணியை தீவிரப்படுத்தி இருந்தால் தற்போது இடிந்து விழுந்து இருக்காது. தற்போது கோயில் நிர்வாகம் பணிகளை உடனடியாக தீவிரப்படுத்தி கோபுரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு வாய்ந்த கோயிலும், தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், புராதான சின்னமாகவும் உள்ள கோயிலின் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதுவே கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான மக்களின் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்று கூறினார்.