வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி தேரோட்டத் திருவிழா.

வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி தேரோட்டத் திருவிழா.

ங்குனி மாதத்தில் வரும் இந்துக்களின் விருப்ப தெய்வமான முருகனுக்கு உகந்த உத்திரம் திருவிழா அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றது .வேண்டும் வரத்தை நல்கும் ஆத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற  வடசென்னிமலை முருகன் கோவில் மற்றும் அங்கு நடைபெற்ற தேரோட்டம் குறித்த பார்வை இது.
       குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது ஆன்றோர் வாக்கு . தமிழ்க் கடவுளான குமரனை வழிபட்டால் குறை இன்றி வாழலாம் என்பது முருக பக்தர்களின் நம்பிக்கை . இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ள முருகனின் கோவில்களில் ஒன்றுதான் ஆத்தூர் அருகே, காட்டுக்கோட்டை வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில்.

      குன்று போல் முக்கோணத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் முருகன் இத்தலத்தில்ஆதி  காலத்தில் சுயம்புவாகவே காட்சி தந்துள்ளார். முன்காலத்தில் ஒருநாள் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் தங்கள் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களுக்கு அறிமுகமே இல்லாத சிறுவன் ஒருவனும் அவர்களுடன் கால்நடைகளை வைத்துக்கொண்டு விளையாடிய தாகவும், விளையாடிய சிறுவர்கள் அருகில் இருந்த குன்றில் ஏறியபோது அந்த சிறுவனும் குன்றில் ஏறியதுடன் திடீரெனத்  தோன்றிய ஒளிவெள்ளத்தில் மாயமாகி போனதாகவும் இந்த கோவில் உருவான வரலாறு சொல்கிறது. 

    சிறுவன் மறைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள் நடந்ததை அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கூறியுள்ளார்கள். உடனே சிறுவன் மறைவதாக சொல்லப் படும் இடத்தில் சென்று பார்த்த போது அங்கே சுயம்புவாக முருகக்கடவுள் காட்சி அளித்துள்ளார். இதைக் கண்டு ஆச்சர்யமான பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு ஒன்று கூடி குன்றில் சுயம்பு முருகனுக்கு கோவில் அமைத்து பூஜை செய்யத்துவங்கினர். 

     முருகன் முக்கோணத்தில் காட்சி தருவது வேறு எங்கும் காணக் கிடைக்காத அருள் காட்சியாக சொல்லப் படுகிறது. இந்த குன்றின் மேல் இருந்து  பார்த்தால் தெரியும் இயற்கை காட்சிகள் வெகு ரம்யமாக உள்ளதால் பக்தர்களுடன் வெளியூரிலிருந்தும் இங்கு வந்து செல்கின் றனர் . இந்த ஆலயத்தில் தைப்பூசம், சஷ்டி சூரசம்ஹாரம், தைவெள்ளி, பங்குனி உத்திரத் தேரோட்டம் போன்ற முருகனின் சிறப்பு வழிபாடுகள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. மேலும் ஒவ்வொரு பௌர்ணமி திருநாள் அன்றும்  மலையை சுற்றி கிரிவலமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு வரும் பக்தர்களின் வயிற்றுப்பசியைப் போக்கும் விதமாக இங்கு அன்னதானமும் உண்டு. 

      இந்தக் கோவிலில் நேற்று  நடைபெற்ற பங்குனி உத்திரத் தேரோட்ட விழாவில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன்னோட்டமாக பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தினசரி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகளுடன் அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்தன. நேற்று பங்குனி உத்திர நாளை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து  மாலை 4 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாலசுப்பிரமணி சுவாமியை  அலங்கரித்து வைத்து தேரோட்டம் நடத்த தயார் நிலையில் இருந்தனர். 

      இதனைத் தொடர்ந்து முக்கிய அரசு அதிகாரிகள் .இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்  கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், கட்டளைதாரர்கள் முன்னிலையில் பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தினை துவக்கினார்கள்.  மலைப் பகுதியில் உள்ள தேரோட்டவீதி  வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்து நிலை நிறுத்தினர்.

     இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் சேலம் , பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 8000  மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் தேரோட்டத்தை முன்னிட்டு ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் கோவிலில்  100க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.மேலும்  தீயணைப்புத் துறையினர் தேரோடும் இடங்களில் அசும்பாவிதம் நிகழாமல் முன்னெச்சரிக் கையாக இருந்தனர். 

     இந்த விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை பரிவேட்டை நிகழ்ச்சியும் இரவு தெப்பத் தேரோட்டமும் நடைபெறுகிறது .மேலும் நாளை காலை சிறப்பு ஆராதனைகளுடன் மகா தரிசனமும் மாலை ஐந்து மணியளவில் நடைபெறும் மஞ்சள் நீர் உற்சவத்துடன் பங்குனித் தேர்த்திருவிழா நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது. 

      இது போன்ற ஆன்மீக விழாக்களும் தேரோட்டங்களும் பல தரப்பட்ட மனிதர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருப்பதை காண முடிகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com