வந்தே பாரத் ரயிலை புல்லட் ரயிலோடு ஒப்பிட்டுப் பேசிய வானதி: கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்!

வந்தே பாரத் ரயிலை புல்லட் ரயிலோடு ஒப்பிட்டுப் பேசிய வானதி: கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்!

ல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்க தமிழகம் வந்திருந்த பாரதப் பிரதமர் சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே சென்னை முதல் பெங்களூர் வரை வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் சென்னையிலிருந்து கோவை செல்ல முடியும்.

இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளது. அதே அளவில் மக்கள் இந்த ரயிலில் பயணம் செல்லவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற ஆறு நாட்களும் இரு மார்க்கமாக இயங்க உள்ளது. இந்த ரயிலை சராசரியாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எட்டு ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 536 இருக்கைகள் உள்ளன. சிறிது காலத்துக்குப் பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இந்த ரயில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் கூட, இந்த ரயிலை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புல்லட் ரயிலுடன் ஒப்பிட்டு பேசி இருப்பது பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வந்தே பாரத் ரயில் தொடர்பாக வானதி சீனிவாசனை அளித்த பேட்டியில், ’’நம்முடைய புல்லட் ரயில் கனவு நினைவாகி இருக்கிறது. 2016ம் ஆண்டு சீனா சென்றிருந்தபோது நான் புல்லட் ரயிலில் சென்றேன். இதேபோல் நம்முடைய நாட்டிலும் புல்லட் ரயில் இயக்கப்படுமா என்று எனக்குக் கனவு இருந்தது, தற்போது அது நினைவாகி இருக்கிறது. நான் பாஜக எம்எல்ஏவாக இருக்கும் சமயத்தில் வந்தே பாரத் ரயில் விடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று வானதி சீனிவாசன் கூறி இருந்தார்.

வானதி சீனிவாசனின் இந்தப் பேட்டி குறித்து நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் கூறுவதிலிருந்து… ’வந்தே பாரத் ரயிலை வானதி புல்லட் ரயிலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். ஆனால், புல்லட் ரயிலுடன் ஒப்பிடுகையில் வந்தே பாரத் ரயில் மிகவும் மெதுவான ரயில் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால், வந்தே பாரத் ரயில் 90 கி.மீ. வேகத்தில்தான் செல்கிறது. 495 கி.மீ. தொலைவை இது 5 மணி நேரம் 50 நிமிடத்தில் கடக்கிறது. இந்த ரயில் அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 130 கி.மீ. தொலைவைத் தொட்டாலும் கூட அதே வேகத்தில் செல்வது இல்லை. இந்த ரயிலின் சராசரி வேகம் என்னவோ மணிக்கு 90 கி.மீ. வேகம்தான். ஆனால், சீனாவின் ஷாங்காய் புல்லட் ரயில் 431 கி.மீ. வேகத்தை அதிகபட்சம் அடையும். சராசரியாக 245 கி.மீ. வேகத்தில் செல்லும்.

ஆரம்பத்தில் நாம் ஜப்பானுடன் இணைந்து புல்லட் ரயிலை அமைப்பதாக இருந்தது. இந்த ஜப்பான் புல்லட் ரயில் அதிகபட்சமாக 500 கி.மீ. வேகத்தில் செல்லும். சராசரியாக 450 கி.மீ. வேகத்தில் செல்லும். சின்கன்ஸென் புல்லட் ரயில்கள் சராசரியாகவே 480 கி.மீ. வேகத்தை அடையும். ரஷ்யாவின் அதிவேக ரயில்கள் 220 கி.மீ. வேகத்தை சராசரியாகத் தொடக் கூடியவை. ஆனால், இந்த ரயில்களுடன் ஒப்பிடுகையில் வந்தே பாரத் சென்னை - கோவை ரயிலை ஒப்பிடவே முடியாது. புல்லட் ரயில் என்பது magnetic levitation முறையில் இயங்கக்கூடியது. அதாவது, சில கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்டவாளத்தில் பயணம் செய்துவிட்டு அதன்பின் கந்த புலம் மூலம் உயர்த்தப்பட்டு தண்டவாளத்தில் இருந்து சில மீட்டர்கள் உயரத்தில் மிதப்பது போல வேகமாகப் பயணம் செய்யும். இதன் காரணமாகவே புல்லட் ரயில்கள் வேகமாகச் செல்கின்றன. ஆனால், வந்தே பாரத் ரயில் சாதாரண ரயில்கள் போலவே தண்டவாளத்தில் மட்டுமே பயணம் செய்யும்.

இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது உண்மைதான். இந்த ரயில் சேவையின் அடையாளம் மட்டுமே மாறி உள்ளது. ஆனால், நமது நாட்டில் புல்லட் ரயில் அளவுக்கு சேவை வழங்க இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டி இருக்கிறது’ என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com