’ஆளுநருக்கு எதிரான நாளைய கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக கலந்துகொள்ளும்’: திருமாவளவன்!

’ஆளுநருக்கு எதிரான நாளைய கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக கலந்துகொள்ளும்’: திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி, திருமாவளவன் தலைமையில் சென்னை, ராமாபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமாவளவன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது…

'’தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதவை நிராகரிக்கவும் முடியாது, காலம் தாழ்த்தவும் முடியாது என்பதால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். இது தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் கிடைத்த வெற்றி. ஆளுநர் அவரின் பதவி, பொறுப்பை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டரைப் போல பேசியும் செயல்பட்டும் வருகிறார். அவர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுகிறார். சனாதானக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கிறார்.

ஆளுநரின் இந்த அணுகுமுறைகளைக் கண்டித்து, வரும் ஏப்ரல் 12ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும். (தற்போது இந்தப் போராட்டம் சைதை தேரடி திடலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது) மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து திரும்பப் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்துகிறது.

ஒரு ஆளும் கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ, சட்ட வரையறைகளின்படியே பிரதமரை வரவேற்கும் முறையில் திமுக செயல்பட்டது. அதே நேரத்தில் ஆளுநர் மற்றும் பிரதமர் மோடியின் ஜனநாயக விரோதப் போக்கினை மிக வெளிப்படையாகவும், வரம்பு மீறாமலும் கண்டிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவை வீழ்த்துவதே லட்சியம் என உறுதிப்பட கூறியிருக்கிறார். எனவே, பிரதமர் மோடியை வரவேற்றதை வைத்து திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவிவிட்டது என்று சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை’' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com