சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வாகன பாஸ் - இனி கவுன்சிலர்கள் பிஸியோ பிஸி!
சென்னை பெருநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவி என்பது ஏறக்குறைய எம்.எல்.ஏ பதவிக்கு ஒப்பானது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதியின் மக்கள் தொகையை விட, அரசுக்கான வரி வசூலை விட சென்னை மாநகராட்சியின் வார்டுகளின் மக்கள் தொகையும் அதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும் வருமானமும் அதிகம்.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அரசு தரப்பில் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தின் மூலமாகவும் மற்றும் நாடாளுமன்றத்தின் மூலமாக பாஸ் வழங்கப்படும். இதனால் பொதுவிடங்களில் வாகனங்களுக்கு முன்னுரிமை தரப்படும். இன்னும் பல சலுகைகளும் கிடைக்கும்.
எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களைப் போல தங்களை நடத்தவேண்டும் என்பது சென்னை வார்டு கவுன்சிலர்களின் நீண்ட கால ஏக்கம். அதில் தவறு ஏதுமில்லை. மக்கள் பணிகளை விரைந்து செய்திடவும், மக்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பதற்கும் வாகன பாஸ் அவசியமாகிறது. ஆகவே, மாநகராட்சி கவுன்சிலர்களின் வாகனங்களுக்கும் பாஸ் வழங்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கவுன்சிலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய வாகன பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், கவுன்சிலர் பெயர், வார்டு எண், மண்டலம், முகவரி, தொடர்பு எண், செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
இனி கவுன்சிலர்கள் வார்டு பக்கம் வருவது, இனி மக்களின் பரவலான கவனத்தைப் பெறும். கவுன்சிலர்களை மக்கள் நேரடியாக சந்திக்க முடியும். தற்போதைய நிலையில் சென்னையில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தனியாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கவுன்சிலர்கள் தங்களது செலவில் உதவியாளர்களை நியமித்து, மக்களுக்கும் தங்களுக்கும் இடையே பாலமாக செயல்பட வைத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட உதவியாளர்கள் அனைவருக்கும் சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஐடி கார்டு தரப்படுமா? யாரை எதற்காக, எப்போது அணுக வேண்டும் என்பது பற்றியும் தெளிவாக அறிவித்தால் நல்லது என்கிறார்கள் சென்னை வாசிகள்.