கைகொடுத்த வால்மார்ட், களைகட்டிய திருப்பூர் - மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மாஸ் காட்டும் நம்மூர் பனியன், ஜட்டிகள்!

கைகொடுத்த வால்மார்ட், களைகட்டிய திருப்பூர் - மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மாஸ் காட்டும் நம்மூர் பனியன், ஜட்டிகள்!

இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் திருப்பூரை தவிர்க்க முடியாது. கடந்த கொரானா அலையின் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. புதிய ஆர்டர்களை பெற முடியாமல், வட இந்திய தொழிலாளர்களையும் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் திணறிப்போயின.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி என திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் வணிகம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டிவிடும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறு குறு நிறுவனங்கள் மூடப்படும் நிலை உண்டானது.

கொரோனா முதல் அலையில் திருப்பூர் தப்பிப் பிழைத்தது. பின்னலாடை ஆர்டர் கிடைக்காவிட்டாலும் கொரானாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக முகக்கவசம், பாதுகாப்பு உடைகளை தயாரிப்பதில் இறங்கினார்கள். குறைந்த செலவில் முகக்கவசம் தயாரித்து ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள்.

இரண்டாம் அலையில் திருப்பூரின் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வட இந்திய தொழிலாளர்களும் ஊருக்கு திரும்புவதில் ஆர்வம் காட்டினார்கள். முகக் கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகளை தயாரிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தர நிர்ணயங்கள் விதிக்கப்பட்டதால், தயாரிப்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

2021 ஆண்டு அக்டோபர் மாதத்தில் 30 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தில் குறைந்து போனது. அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தாலும் முழுத்திறனையும் பயன்படுத்தமளவுக்கு 2019க்கு முந்தைய சூழல் திரும்பவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் ஆர்டர்களும் பெரிய அளவில் வராத நேரத்தில் கடந்த 3 மாதங்களில் நிலைமை பெரிய அளவில் மாற்றம் பெற்றிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் பின்னலாடை உற்பத்தி, 11.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வால்மார்ட் நிறுவனம் நிறைய ஆர்டர்களை எடுக்க ஆரம்பித்ததும் புதிய ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளன. இதுவரை கிடைக்காத அளவுக்கு வால்மார்ட் மூலமாக 80 முதல் 100 கோடிக்கான ஆர்டர்கள் கிடைத்திருக்கின்றன.

முன்னர் வங்கதேசம், வியட்நாம், தாய்லாந்து போன்றவை திருப்பூரை விட குறைவான விலைக்கு பின்னலாடை உற்பத்தியை செய்து வந்தன. ஆனால், கடந்த பத்து மாதங்களில் நிலைமை மெல்ல மாறிவிட்டது.

திருப்பூரில் தயாராகும் பனியன், ஜட்டிகளில் 63 சதவீதம் அமெரிக்காவுக்கும் 29 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும், உக்ரைன் யுத்தமும் திருப்பூரை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com